Published : 25 Dec 2018 11:43 AM
Last Updated : 25 Dec 2018 11:43 AM

இந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறைக்கு இரண்டாம் இடம்: மருத்துவ கவுன்சில் தலைவர் தகவல்

இந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறை 2-வது இடத்தைப்  பிடித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் வினோத் கே.பவுல் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா இணைந்து அகில இந்திய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் மாநாட்டை பல்கலைக்கழகத்தில் நேற்று நடத்தியது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சே.கீதாலட்சுமி தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த மாநாட்டில் நிதி ஆயோக் உறுப்பினரும், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருமான வினோத் கே பவுல் மற்றும் 13 மாநில மருத்துவ பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் வினோத் கே பவுல் பேசியதாவது:

மத்திய அரசு ஆண்டுக்கு மூன்றில் இரண்டு சதவீத நிதியை சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளுக்கு ஒதுக்குகிறது. இந்தியாவில் 1 லட்சம் மக்களுக்கு 42 டாக்டர்கள் உள்ளனர். துறை சார்ந்த நிபுணத்துவ வாய்ந்த டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதில் 1 லட்சம் மக்களுக்கு 5 பேர் எண்ணிக்கையில் நிபுணத்துவ டாக்டர்கள் உள்ளனர்.

பிரேசில், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போல், நிபுணத்துவ டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பல்கலைக்கழக தரத்தை உறுதி செய்தல், தற்போதைய சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டு வருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதா,  நாடாளுமன்ற நிலைக்  குழுவில் உள்ளது. எந்த மாநிலமும் பாதிக்காத வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

தேசிய அளவில் சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தேசிய அளவிலான மருத்துவ சேவை நீடித்த வளர்ச்சி இலக்குக்கான தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “கரூரில், 250 கோடி ரூபாய் செலவில் 150 மருத்துவ இடங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. தற்போதுள்ள மருத்துவக்  கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறை 2-வது இடத்தைப்  பிடித்துள்ளது. முதலிடம் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x