Published : 28 Dec 2018 09:19 PM
Last Updated : 28 Dec 2018 09:19 PM

ஓடும் மோட்டார் சைக்கிளில் விபரீதம்; மாஞ்சா நூல் அரசு மருத்துவர் கழுத்தை அறுத்தது: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொளத்தூரை சேர்ந்தவர் சரவணன், அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பூர் ரயில்வே லோகோ பாலத்தின்மீது சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பறந்துவந்த மாஞ்சாநூல் வேகமாக சென்றுக் கொண்டிருந்த அவரது கழுத்தை அறுத்தது. இதில் மாஞ்சா நூலில் உள்ள கண்ணாடி துகள்கள் தோய்ந்த நூல் கத்தியைப்போன்று அவரது கழுத்தை அறுத்தது. மோட்டார் சைக்கிள் வேகத்தால் அவரால் நூலை தடுக்க முடியாமல் சாலையில் சரிந்து விழுந்தார்.

சாலையில் திடீரென ஒருவர் விழுவதும் அவரது கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக அறுத்துள்ளதை கண்ட சக வாகன ஓட்டிகள் டாக்டர். சரவணனை மீட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்தில் ஆழமாக மாஞ்சா நூல் அறுத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதே பாலத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பூர் சேமாத்தம்மன் காலனியைச் சேர்ந்த ராஜு (28). தனது மனைவி நிரோஷா (25). மகன் அஜய் (5). மூன்று வயது மகளுடன் காலாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி ஜாலியாக ஓட்டலில் சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதே இடத்தில் பாலத்தில் இருந்து இறங்கும்போது திடீரென காற்றாடி ஒன்றின் மாஞ்சா நூல் முன்னால் அமர்ந்திருந்த அஜயின் கழுத்தை அறுத்தது. சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்த சோகம் நடந்தது.  

தற்போது 3 ஆண்டுகள் கழித்து அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. காற்றாடியில் தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பறக்கவிட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x