Published : 15 Dec 2018 03:29 PM
Last Updated : 15 Dec 2018 03:29 PM

ஜூனியர் அதிகாரிகளை இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமிப்பது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி:ஸ்டாலின்

ஜூனியர் அதிகாரிகளை இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமிப்பது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீரழிக்கும் வகையில், மேலாண் இயக்குநர் பதவிகளில் ஜூனியர் அதிகாரிகளைப் பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து, ஏழை எளியவர்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்படும் போக்குவரத்துத் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சொல்வதைக் கேட்கா விட்டால் பொது மேலாளர்களை இன்சார்ஜ் பொறுப்பில் போட்டு பார்த்துக் கொள்கிறேன் என்று மேலாண் இயக்குநர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அச்சுறுத்தும் முறையில் அமைச்சர் பேசினார் என்று போக்குவரத்துக் கழகத்தில் செய்தி அடிபடுகிறது.

அதை நிரூபிக்கும் வகையில், சீனியாரிட்டி பட்டியலில் முதலில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சீனியர்களை எல்லாம் புறக்கணித்து, ஓரங்கட்டி விட்டு, அனுபவம் இல்லாதவர்களையும், மண்டலங்களில் பொது மேலாளராகக் கூட பணியாற்றாதவர்களை மேலாண் இயக்குநர்களாக போக்குவரத்துத் அமைச்சர் விஜயபாஸ்கர் அபத்தமாகவும், பெருத்த ஆதாயத்திற்காகவும் நியமித்திருப்பது போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையும் குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல் எப்படியெல்லாம் பிய்த்து எறியப்படுகிறது என்பதைத்தான் இந்த நியமனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பொறுப்பு மேலாண் இயக்குநர் பதவி போக்குவரத்துத் துறையில் கூவிக் கூவி ரேட்டிற்கு விற்கப்படும் சூழல் புரையோடிப் போயிருப்பதுதான் இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடந்துள்ள இதுபோன்ற நியமனங்களில் எதிரொலித்திருக்கிறது. மதுரையில் பொது மேலாளராக இருப்பவர் கோவைக்கும், சென்னையில் இருப்பவர் விழுப்புரத்திற்கும், ஈரோட்டில் இருப்பவர் மதுரைக்கும் நியமிக்கப்பட்டு, இரட்டைப் பொறுப்பு வழங்கப்பட்டு, இன்றைக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. ஓரிடத்தில் பணிபுரியும் பொது மேலாளர் 160 கிலோமீட்டர்களுக்கும் மேலுள்ள வேறொரு இடத்தில் இன்சார்ஜ் அதிகாரியாக நியமிக்கப்படுவதின் மர்மம் என்ன?

இந்தப் பொறுப்பு மேலாண் இயக்குநர்கள் ஏதோ பெயரளவுக்கோ, தற்காலிகமாகவோ நியமிக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த இன்சார்ஜ் பதவிக்காக கூடுதலாக 19 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பங்குதாரராக ஆக்கப்படுகிறார்கள்.

அதையும் விட முக்கியமாக ஒரு மேலாண் இயக்குநருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு நிர்வாகக்குழு கூட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த பொது மேலாளர்கள் கூட்டத்தில் பின் வரிசையில் அமர்ந்திருந்த இந்த ஜூனியர் மேலாண் இயக்குநர்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்பது கேலிக்கூத்தாகவும், நிர்வாக அவலட்சணமாகவும் இருக்கிறது. இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களுக்கு இவ்வளவு அதிகாரங்களைக் கொடுத்து அமைச்சர் தனது ஊழலுக்கும், தான் சொல்லும் உத்தரவுகளை பிறப்பிக்கவும் பயன்படுத்தி, அரசு போக்குவரத்துக் கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே ஜூனியர் அதிகாரிகளை இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமித்ததை உடனடியாக ரத்து செய்து, சீனியாரிட்டிப்படி மூத்த, அனுபவம் உள்ள அதிகாரிகளை அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊழல் செய்யும் ஒற்றை நோக்குடனும், ஊழலுக்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் இப்படி இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களை நியமிப்பது சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடு விழா நடத்தும் அதிமுக அரசின் கேடுகெட்ட செயல்" என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x