Published : 17 Dec 2018 08:40 AM
Last Updated : 17 Dec 2018 08:40 AM

‘இந்து தமிழ்’ - ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து வேலூரில் நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி: மனதையும் ஆற்றலையும் ஒருங்கிணைத்து படித்தால் வெற்றி நிச்சயம்; ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி. பாரி அறிவுரை 

‘இளம் வயதில் நமது மனதையும் ஆற்றல் களையும் ஒருங்கிணைத்து படித்தால் நிச்சயமாக வெற்றிகள் வசப்படும்’ என்று ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி. பாரி தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’- ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு இளையோர்களை தயார்ப்படுத்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐ.ஜி. பாரி பேசியதாவது: ‘‘ஆழமான அறிவைவிட அகலமான ஆற்றல் பெற்றவரால்தான் ஆட்சிப் பணியில் இருக்க முடியும். அரசுப் பணியாளர் தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே படித்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன். பசுமரத்தாணிபோல் புரிந்து படிக்க வேண்டும். மற்றவர்களின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் பணியாற்றினால்தான் ஜெயிக்க முடியும். ஐஏஎஸ்., ஐபிஎஸ் என யாராக இருந்தாலும் மனிதனாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம் அவசியம்.

ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளை களைய வேண்டும். அரசு என்பது அகல் விளக்கைப் போல் இருக்க வேண் டும். இளம் வயதில் மனதை ஒருங்கிணைத்து படித்தால் நிச்சயமாக வெற்றிகள் வசப்படும்’’ என்றார்.

தமிழர்களுக்கு கிடைத்த பரிசு

திருவண்ணாமலை உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதாப் பேசும்போது: ‘‘இந்து நாளிதழும் ஐஏஎஸ் தேர்வுக்கான தயாரிப்பும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்து நாளிதழ் தமிழில் ஒரு நாளிதழை தொடங்கியதும் அதே தரத்தில் அதைக் கொண்டு வருவதும் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பரிசு. குறிப்பாக, நடுப்பக்க கட்டுரைகளை, தலையங்கத்தை படித்துவிட்டு ஆய்வு செய்வது என்பதும், விவாதிப்பதும் மிக முக்கியமான பயிற்சி.

நான் இந்து குழுமத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்து தமிழ் நாளிதழை செல்பேசியில் இருந்து செயலி வழியாக படிக்க இன்னும் மேம்பட்ட செயலியை உருவாக்கித்தர வேண் டும். ஏனென்றால் உலகெங்கும், குக்கிரா மங்களுக்கும் இந்த நாளிதழ் போய்சேர வேண்டிய தேவை இருக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றாலே தனி மரியாதை உள்ளது. இந்தப் பணிக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதற்கு தகுதியான நபரை தேர்வு செய்யும் வகையில்தான் இந்த தேர்வும் உள்ளது. இந்த உலகத்தை பரந்து விரிந்து பார்ப்பதே குடிமைப் பணி தேர்வுக்கான தகுதியாகும். அன்றாடம் மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த வேலையை அரசு வழங்குகிறது. தனி மரியாதையும் மன நிறைவும் இந்தப் பணியில் இருக்கிறது.

சமீபத்தில் திருவண்ணாமலையில் பெற்றோரின் நிலத்தை தானமாக பெற்ற மகன்கள் அவர்களை பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றினர். அவர்கள், மகன்களுக்கு தானமாக கொடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைத்தோம். தற்போது, பத்திரப்பதிவுத் துறை ஐஜி சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பிள்ளைகளுக்கு பெற்றோர் தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதும்போதே அவர்களை பராமரிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது. பெற்றோரை பராமரிக்காவிட்டால் அந்த சொத்தை அவர்களே திரும்பப்பெறும் நடைமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது என்ற தகவல் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஆட்சிப் பணிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான பயனுள்ள காரியங்களை செய்ய முடியும்’’ என்றார்.

சந்தேகங்களுக்கு விளக்கம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பிரவீன்குமார், தேவதர்ஷினி, நீலவேந்தன், நாகலட்சுமி, பெர்னாட்ஷா, ஷியாத், சவுந்தர்யா உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பினர். மேலும், குடிமைப் பணி தேர்வு தொடர்பாக இளைஞர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதாப் விளக்கமளித்தார். தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்வது, எளிமையாகவும் திட்டமிட்டு படிப்பது, பிரதான தேர்வுக்கான பாடங்களை தேர்வு செய்வது, நேர்முக தேர்வை சுலபமாக எதிர்கொள்வது குறித்தும் அவர் விளக்கினார். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுங்கள்

‘இந்து தமிழ்’ நாளிதழ் நடுப் பக்க ஆசிரியர் சமஸ்: முதல் நிலை நகரங் களில் ஒரு சுற்று வந்துவிட்டு இப்போது இரண்டாம் நிலை நகரங்கள் நோக்கி செல்கிறது இந்த உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். நோக்கம், ஒரு சிலரை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க வேண்டும் என்ற எண்ணமல்ல. ஒட்டுமொத்த இளைய தலைமுறையிடமும் ஒரு சமூக உணர்வையும் சமத்துவ உணர்வையும் உண்டாக்குவதுதான். தமிழ் மாணவர்கள் இடையே இன்று ஒரு தாழ்வு மனப்பான்மையை பொதுவாக பார்க்க முடிகிறது. தம்மை ஏதோ ஒரு பிழைப்புக்கு தயார்படுத்திக்கொள்ளும் ஆளாக சுருக்கிக் கொள்வது அதன் வெளிப்பாடுதான். தமிழ் மாணவர்கள் உலகை ஆளும் கனவுடன் வளர வேண்டும்.

ஐஏஎஸ் தேர்வுக்கு அச்சப்பட தேவையில்லை

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் சத்யஸ்ரீ பூமிநாதன்: ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு என்றால் நம்முடைய மாணவர்கள் கொஞ்சம் அச்சத்துடன்தான் பார்க்கிறார்கள். ஆனால் அச்சத்துக்கான தேவையே இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்தே குடிமைப் பணியில் தமிழர்கள் முன்னணி வகித்து வந்திருக்கிறார்கள். பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதாலேயே கஷ்டமான தேர்வு அல்ல. உள்ளபடியே முறையாக தேர்வுக்கு வருபவர்கள் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்கள்தான். முறைப்படி தயாரானால் எவரும் ஜெயிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x