Published : 28 Dec 2018 01:50 PM
Last Updated : 28 Dec 2018 01:50 PM

திமுக ஆட்சிக்கு வந்தாலும் தமிழக நிலைமை மாறப்போவதில்லை: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

திமுக ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை என, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அவர்களது குறைகளைக் கேட்டறிந்த அவர் கோரிக்கைகள் குறித்து தேமுதிக சார்பில் எடுத்துரைக்கப்படும் எனவும், தேமுதிக தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், "ஆசிரியர்களின் சம்பளம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்கள் வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். எல்லோரையும் முன்னேற்றிவிடும் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், நாம் புத்தாண்டு கொண்டாடுவது நல்லதல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட 88 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆசிரியர்களின் போராட்டம் திமுக, அதிமுக இரு ஆட்சிக்காலத்திலும் மாறிமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நானும் சிறுவயதிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே இதனைப் பார்த்து பார்த்து நமக்கு பழகிவிட்டது. திமுக வந்தாலும் இந்த நிலைமை மாறப்போவதில்லை. ஆசிரியர்கள் கஷ்டப்படுவதை பார்த்தால் சங்கடமாக இருக்கிறது.

ஹைதராபாத் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தமிழகம் அப்படியே இருக்கிறது. கல்வியில் 2-3 ஆம் இடத்திலேயே உள்ளது" என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

பின்னர், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து பேசிய விஜய பிரபாகரன், "அடிப்படை விதிமுறைகளைக் கூட கடைபிடிக்க தெரியாத ஊழியர்கள் இருந்தால் இந்த அரசு எப்படிப்பட்டது என நாம் புரிந்துகொள்ள முடியும். அப்பெண்ணை நினைத்தால் பாவமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள் என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "நான் தீர்வு சொன்னால் சின்னப் பையன் என சொல்வீர்கள். இத்தனை வருடம் ஆட்சியில் இருந்தவர்களைக் கேட்க வேண்டும். ஆட்சி மாற வேண்டும் என நான் சொன்னால் சுயநலம் என்பார்கள். என் குற்றச்சாட்டு திராவிடக் கட்சிகள் மேல் அல்ல. ஆளும் கட்சி மீது தான்" என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x