

சொத்துக்களை அபகரிக்க சதி நடப்பதாக ‘தி இந்து’வுக்கு எம்.ஏ.எம். ராமசாமி பேட்டி
கம்பெனிகள் பதிவாளருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச்சோழன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ‘இது எல்லாமே ஜோடிக்கப் பட்டவை. என் சொத்துக்களை அபகரிக்க சதி நடக்கிறது’ என்று எம்ஏஎம் ராமசாமி ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங் கள், கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்வது, அந்நிறு வனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்வது ஆகிய பணிகள் கம்பெனிகள் பதிவாளரின் (ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸ்) பொறுப்பில் வரும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கம்பெனிகள் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்துக்கான கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் சென்னையை தலை மையிடமாகக் கொண்டு உள்ளது. இங்கு கம்பெனிகள் பதிவாளராக இருப்பவர் மனுநீதிச்சோழன். சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச்சோழனை சிபிஐ அதிகாரிகள் செவ் வாய்க்கிழமை பிற்பகலில் கைது செய்த னர். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்த தாவது:
செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எம்.ஏ.எம்.ராமசாமி. இவர் சென்னை கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச்சோழனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். ‘செட்டிநாடு குழுமத் தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்காக நிர்வாகக் குழு வரும் 27-ம் தேதி கூடப்போகிறது. முறையான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு தலைவரை நீக்குவது, கம்பெனிகள் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று ராமசாமி கேட்டுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள எம்.ஏ.எம்.ராமசாமி யின் வீட்டுக்கு மனுநீதிச்சோழன் செவ் வாய்க்கிழமை பிற்பகல் சென்றுள்ளார் ரூ.10 லட்சத்தை வாங்கிக்கொண்டு தனது காரில் திரும்பினார். அவரை வழி மறித்து சோதனை செய்தோம். காரில் இருந்த ரூ.10 லட்சம் குறித்து கேட்டபோது அவ ரால் சரியான பதில் கூறமுடியவில்லை.
இதையடுத்து, மனுநீதிச்சோழனை அழைத் துக் கொண்டு நுங்கம்பாக்கம் அலுவலகத்தி லும், தி.நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினோம். இதில் மேலும் ரூ.20 லட்சம் சிக்கியது. மேலும் பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம்.
மனுநீதிச்சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக எம்.ஏ.எம்.ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை. ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘எல்லாம் ஜோடிக்கப்பட்டவை’
இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஏ.எம்.ராமசாமி யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
எல்லாமே தவறாக நடக்கிறது. இந்த பிரச்சினை எல்லாமே ஜோடிக்கப்பட்டவை. எனது செட்டிநாடு குழும நிறுவனங் களை சுரண்டுவதற்காக திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர். என்னை அதிகார மில்லாத தலைவராக மாற்றுவதற்காக இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனது சொத்துக்களை அபகரிக்கவும், என்னை தனிமைப்படுத்தவும் இதை செய்துள்ளனர். இவ்வாறு எம்.ஏ.எம்.ராமசாமி கூறினார்.
ராஜாபோல வலம்வந்தவர்
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தொழில திபர்களில் ஒருவர் எம்.ஏ.எம்.ராமசாமி. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இருந்தவர். மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தார். சென்னை ரேஸ் கிளப் தலைவராக இருந்தவர். குதிரைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட ராமசாமி, 400 குதிரைகளுக்கு மேல் இப்போதும் பராமரித்து வருகிறார். ஒரு ராஜாவைப் போல வலம்வந்தவர்.
82 வயதாகும் ராமசாமி, மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இவரது வளர்ப்பு மகன் முத்தையா. எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாதான் தற்போது செட்டிநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குநர்.
‘சொத்துகளை கைப்பற்றுவதற்காக வளர்ப்பு மகன் முத்தையா என்னை மிரட்டுகிறார். வீட்டில் என் அனுமதி இல்லாமல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று ராஜா அண்ணாமலைபுரம் போலீஸ் நிலையத்தில் எம்.ஏ.எம்.ராமசாமி சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, செட்டிநாடு குழும நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி லலித் குமாரை போலீஸார் விசாரித்தனர். நிறுவனத்தின் தலைவர் முத்தையாதான் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தச் சொன்னதாக போலீஸில் லலித் குமார் கூறினார். அப்பா மகன் இடையிலான குடும்பப் பிரச்சினை என்பதால் அந்த வழக்கை அப்படியே விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.