

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என, நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோவை மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சன் வெளியிட்ட வீடியோவில், "கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஏற்பட்ட 'கஜா' புயல் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும் அழிவை 'கஜா' புயல் விட்டுச் சென்றுள்ளது.
3.7 லட்சம் பேர் வீடற்றவர்களாகி உள்ளனர். 3.4 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்த பகுதியிலிருந்த 50-80 சதவீத தென்னை மரங்கள் வீழ்ந்தன.
இந்தியாவுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தரும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வீழ்ந்த மரங்களால் போக்குவரத்து தடை, மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இது வெறும் மதிப்பிடப்பட்ட சேதங்கள் மட்டும் தான். உணவு உற்பத்தி செய்யும் இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள விவசாய அழிவு கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் உதவிகள் செய்துள்ளன. ஆனால், தன்னார்வலர்கள், சமூக நல இயக்கங்கள் நம் மக்களுக்கு உதவுவதில் பெரும் அளவில் பங்காற்றியுள்ளனர்.
ஒரே தேசம் ஒரே மக்கள் என்பதே இந்தியாவின் ஒற்றுமை. 'கஜா'வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், சகோதரத்துவத்தை உணர்த்துவதற்கு இதுவே சிறந்த நேரம்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் களத்தில் நின்று வேலை செய்கிறார்கள். 'கஜா' பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள உதவிபுரியுங்கள், நன்றி" என அமிதாப் பச்சன் பேசியுள்ளார்.
இதற்கு கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், "கஜா பாதிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நம் நாட்டில் வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் இணைவதற்கு உங்களைப் போன்றவர்கள் ஒரு 'நூலாக' செயல்படுகிறீர்கள்" என பதிவிட்டுள்ளார்.