

சுரங்கத்திற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் கிராமங்களில் பொது வாக்கெடுத்த நடத்த என்எல்சி முன்வருமா என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட 26 கிராமங்களில் வீடு மற்றும் விளைநிலங்களைக் கையகப்படுத்தி என்எல்சி இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக கடந்த 11-ம் தேதி 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தியது.
இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்ப தெரிவித்துவரும் நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று (திங்கள்கிழமை) விருத்தாசலம் பாலக்கரையில் சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்த்தில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்எல்சி இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கும் அமைப்பதற்காக 26 கிராமங்கள் மூலம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கடந்த காலங்களில் என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தியபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மாறாக, நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தினைக்கொண்டு ராஜஸ்தான், உத்தரப்பிரேதசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மின் திட்டங்களை நடத்திவருகிறது. ஆனால் இங்கு வீடு, நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது. வட மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் முதல் பொறியாளர்கள் வரை நியமிக்கின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. ஆனால், வீடு நிலம் கொடுத்த வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் எம்மக்களுக்கு அள்ளிக் கொடுக்கவுமில்லை, கிள்ளிக் கொடுக்கவும் முன்வரவில்லை.
ஏற்கெனவே வீடு, நிலம் வழங்கிய 13 ஆயிரம் பேர் கடந்த 25 ஆண்டுகளாக இழப்பீடுக் கோரி வழக்குத் தொடுத்து, அதுவும் நிலுவையில் உள்ளது. அப்பரண்டீஸ் முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. எந்தவித அடிப்படை வசதிகள் போன்ற எண்ணற்ற குறைகள் தொடருகின்ற நிலையில் இப்பகுதிமக்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு எங்கே செல்வர்.
எனவே 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி 80 சதவீத ஆதரவுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் தான் நிலங்களைக் கையகப்படுத்தவேண்டும். அந்த வகையில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தவுள்ள 26 கிராம மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த முன்வருமா?
பசுமையான சூழலை கெடுத்துவிட்டு, சுரங்கம் தோண்ட முயற்சிக்கும் என்எல்சி நிர்வாகம், தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என வேல்முருகன் பேசினார்.