

காமராஜரை போன்ற இன்னொரு தலைவருக்காக தமிழகம் ஏங்குகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
‘இந்து தமிழ்’ சார்பில் ‘கல்விச் சிற்பியைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
காமராஜர் ஆட்சியில் இருந்து இறங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அரை நூற்றாண்டு என்பது சாதாரணமல்ல. அவருக்கு இணையாக அல்லது அவர் வழியில் வரக்கூடிய ஒரு தலைவரை பெறவில்லையே என்ற ஏக்கம் தமிழகத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் உள்ளது. காமராஜரைப் பற்றி இன்றும் பேச வேண்டிய காரணம் என்னவென்றால் நுணுக்கமான பல விஷயங்களை செய்து ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக வித்திட்டவர் அவர்.
அவருடைய திட்டங்கள் அனைத் தும் தீர்க்கதரிசனத்துடன் இருந்தன. மக்களிடம் வாக்கு வாங்குவதற் காக எதையும் அவர் செய்த தில்லை. இன்றைக்கு இருக்கும் தமிழகம் ஒருவரால் திட்டமிடப் பட்டு, அடித்தளமிடப்பட்டு, கட்ட மைக்கப்பட்டு கட்டி எழுப்பப்பட்டது என்றால் அது காமராஜரால் மட்டும் தான். தொழில், விவசாயம் உள் ளிட்டவற்றின் மூலம் எந்த வருமானமும் வராத நிலையிலும் 9 ஆண்டு காலம் பொற்கால ஆட்சியை வழங்கினார்.
ஊழல் எங்கிருந்தோ புறப்பட்டு வந்த விஷயம் அல்ல. ஊழலை உருவாக்குவதே நாம்தான். உங்கள் வீட்டில், தெருவில் ஊழல் இல்லாமல் இருந்தால் ஊரிலும் ஊழல் இல்லாமல் இருக்கும். எனவே நமக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்ற காரணத்துக்காக சட்டத்துக்கு புறம்பாக வேறு வழிகளில் பலனை பெறக் கூடாது என்று பெற்றோருக்கு குழந்தைகள் எடுத்துக் கூற வேண்டும். நாம்தான் ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறோம். வளர்ந்த சமூ கத்தை மாற்றுவது கடினம். வளர்ந்து வரும் நாளைய சமூகத்தை மாற் றினால் ஊழலற்ற நிலை சாத்தியம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி பெற்ற மாணவர்கள்
‘இந்து தமிழ்’ சார்பில் நடத் தப்பட்ட பேச்சுப் போட்டியில், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில், சென்னை அம்பத்தூர் ராமசாமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ச.தனுஷ் கார்த்திக், கே.கே.நகர் தாய் சத்தியா மெட்ரிகுலேஷன் பள்ளி அ.யாழினி பர்வதம், காஞ்சி புரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விஷாலி, நாகப்பட்டினம் மேலை யூர் அழகுஜோதி அகாடமி அ.மது மிதா, சிதம்பரம் எடிசன் ஜி.அகோரம் மெமோரியல் பள்ளி கு.கயல்விழி, ஊத்தங்கரை தீரன் சின்னமலை சர்வதேச பள்ளி நர்மதா, நீடாமங் கலம் ஜெயின் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஷோபனப்ரியா, வடலூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி புனிதவதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மேலும் தஞ்சாவூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி ஜே.கண்மணி, திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சுப, தேனி லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மோனிகா, கரூர் சங்கர வித்யாலயா சீனியர் பள்ளி கனிஷ்கா, திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் பள்ளி ப.பவதாரிணி, திருநெல்வேலி இடை யன்குளம் அமீர்ஜமால் மேல்நிலைப் பள்ளி ரெனிஷா, மதுரை சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராம் பிரபு, திருச்சி ஜெகன் மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி துர்காதேவி, தஞ்சாவூர் மகாத்மா மெட்ரிக் பள்ளி அட்சயா, திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் பள்ளி கீர்த்தனா, நாமக்கல் சர்வதேச பள்ளி ராஜேஸ்வரி பிரபா, திருப்பூர் நாச்சம்மாள் வித்யாவாணி சிபிஎஸ்இ பள்ளி அனுபிரபா, தேனி எஸ்யுஎம் மேல்நிலைப் பள்ளி சங்கர், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஷீரின்சித்தாரா, ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பா.தென்னவன் ஆகிய 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரி யர் சமஸ் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடந்தது. சிறப்பாக உரை யாற்றிய சங்கர், ஜே.கண்மணி, புனிதவதி, ச.தனுஷ்கார்த்திக் ஆகிய 4 மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களும், சிறப்பு தொகையும் வழங்கப்பட்டன.
‘இந்து தமிழ்’ நாளிதழின் வர்த்தக பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்ரமணியன், விற்பனை பிரிவு தலைவர் ராஜ்குமார், முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரூபி பில்டர்ஸ், ஸ்ரீகாளீஸ்வரி கலை கல்லூரி, ரெப்பியுட் நிறுவனம் ஆகியவை நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.‘காமராஜர் அபாரமான வாசகர்’
நிகழ்ச்சியில், மாணவர்களுடன் கலந்துரையாடிய ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியதாவது:
ஒரு அமைப்புக்குள் தன்னை உள்ளடக்கிக்கொண்டு, தான் உண்மை என நம்பும் காரியங்களை எப்படிச் செயல்படுத்துவது என்பதை காமராஜரிடமிருந்து நாம் கற்க வேண்டும். நேரு யுகத்தின் காங்கிரஸ் முதல்வர்கள் பலரும் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தியவர் காமராஜர். தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மனிதவளக் கட்டமைப்புகளிலும் தமிழ்நாடு இன்று முன்வரிசையில் நிற்க இது முக்கியமான காரணம்.
படிக்காத மேதை என்று பலரும் காமராஜரைச் சொல்வது வழக்கம். ஆனால், காமராஜர் அபாரமான வாசகர். காலையிலேயே எல்லா தினசரிகளையும் வாசிக்கும் பழக்கம் உடையவர், எல்லா வார, மாத இதழ்களையும் வாசித்தார் என்பதெல்லாம் போக சிற்றிதழ்களையும் வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த முதல்வர் அவர்.
இவ்வாறு அவர் கூறினார்.