Published : 18 Dec 2018 03:01 PM
Last Updated : 18 Dec 2018 03:01 PM

கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு: சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் வழிப்பறி

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த பெண் பயணியை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்

சென்னை பாலவாக்கத்தில் வசிப்பவர் கல்யாண் (32). இவரது மனைவி மலர் (27) . சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மலர் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக திருவான்மியூரிலிருந்து பறக்கும் ரயில் மூலம் சிந்தாதிரிப்பேட்டை வந்து அங்கிருந்து வேப்பேரிக்கு பணிக்குச் செல்வார்.

நேற்றும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு வீட்டிற்குச் செல்வதற்காக சென்னை சிந்தாரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் வரத் தாமதமாகியுள்ளது.  இரவு 10.30 மணியளவில் ரயில் நிலையத்தில் மலர் தனியாக நின்றிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர் அருகில் வந்து பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் திடீரென கத்தியைக் காட்டி மலரை மிரட்டியுள்ளார்.

பயந்துபோன மலர் அக்கம் பக்கம் உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? எனப் பார்த்துள்ளார். ஆனால் யாரும் ஸ்டேஷனில் இல்லை. கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் நகையைத் தராவிட்டால் குத்திவிடுவதாக மிரட்டி மலர் அணிந்திருந்த நகை, கையில் வைத்திருந்த பணம் மற்றும் அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலர் தன்னிடம் வழிப்பறி செய்த நபர் குறித்து, அவரது கணவர் கல்யாணிடம் தகவல் தெரிவித்தார். வீடு திரும்பிய அவர் இது குறித்து திருவான்மியூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறக்கும் ரயில் நிலையம் ஏதோ ஒதுக்கப்பட்ட ஒன்றுபோல் உள்ளது. அங்கு இரவு 8 மணிக்குமேல் தனியாக பயணிகள் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. தரமணி, திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. கஞ்சா அடிப்பது, கும்பலாக அமர்ந்து அரட்டை அடிப்பது என பெண் பயணிகளுக்கு அச்சுறுத்தல் தரும் நிலை உள்ளது.

ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு போலீஸ் கூட காவலுக்கு இல்லாத நிலை உள்ளது. சிசிடிவி கேமராக்களும் இல்லை. இது குறித்து பயணிகள் பலமுறை புகார் அளித்தும் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x