Published : 01 Dec 2018 10:12 AM
Last Updated : 01 Dec 2018 10:12 AM

கவனிக்காமல் கைவிடப்படும் வயது முதிர்ந்த பெற்றோர் வாரிசுகளுக்கு கொடுத்த தான செட்டில்மென்டை ரத்து செய்யலாம்: சட்டப்படியான புதிய வழிமுறைகளை வெளியிட்டது பதிவுத்துறை 

தங்களை கவனிக்காத நிலையில், வயது முதிர்ந்த பெற்றோர், பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்து தானத்தை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கோ, உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கோ தங்கள் பெயரில் உள்ள சொத்துகளை ‘தான செட்டில் மென்ட்’ அடிப்படையில் வழங்கலாம். இதற்கான பதிவுக் கட்டணம் குறைவு என்பதால், அதிக அளவில் பெற்றோர் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுக்கும்போது, தங் களை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை புகுத்தியிருப்பார்கள். சிலர், தங்கள் பிள்ளைகள் மீதுள்ள பாசத்திலும், நம்பிக்கையிலும் அவ்வாறு சேர்ப்பதில்லை.

சிலர், எந்த காலத்திலும் தங்களால் இந்த தானத்தை ரத்து செய்ய இயலாது என்றும், தங்கள் காலத்துக்குப் பின்னர் இந்த சொத்துக்களை அனுபவிக்கவோ, விற்கவோ முடியும் என்றும் நிபந்தனைகளை புகுத்தி யிருப்பார்கள்.

இந்நிலையில், தற்போது தானம் பெற்ற பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் தானம் அளித்தவர் களை கவனிக்காத நிலையில், குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கலாகி அதன்பேரில் தீர்ப்பு களும் வெளியாகியுள்ளன. இவற்றின் அடிப்படையில், வயது முதிர்ந்தவர்களை கவனிக்காத பிள்ளை களுக்கு வழங்கப்பட்ட சொத்துக்கான தான செட்டில்மென்டை சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு ரத்து செய்வதற்கான வழிமுறைகளை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கை வெளியீடு

இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளார்.

அதில், எந்தவித நிபந்தனைகளும் இன்றி தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தவர், அந்த தானத்தை ரத்து செய்யக் கோரி, பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்தால், அந்த பத்திரத்தை பதிவுக்கு ஏற்கக் கூடாது. பதிவு செய்ய முடியாததற்கான மறுப்பு சீட்டை பதிவாளர் அளிக்க வேண்டும்.

ஒரு வேளை நிபந்தனையின்றி எழுதிக் கொடுக்கப்பட்ட தான செட்டில்மென்ட்டை ரத்து செய்ய பத்திரம் அளிக்கப்படும்போது, எழுதிப் பெற்றவரும் அதில் விருப்பம் தெரிவித்து பதிவு அலுவலர் முன் தோன்றி கையொப்பமிட்டால் அந்த பத்திரத்தை பதிவாளர் பதிவுக்கு ஏற்கலாம்.

நிபந்தனைகளுடன் எழுதிக் கொடுக்கப்பட்ட செட்டில்மென்ட் பத்திரங்களில், அந்த நிபந்தனைகளை எழுதிப்பெற்றவர் பூர்த்தி செய்யவில்லை என்பதை தெளிவாக ரத்து பத்திரத்தில் குறிப்பிட்டு, எழுதிக் கொடுத்தவர் மட்டும் பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.

இந்த நிகழ்வுகளில் செட்டில்மென்ட் ஆவணத்தில் அந்த நிபந்தனைகள் இருக்கிறதா என்பதை பரிசீலித்து உறுதி செய்து ரத்து பத்திரத்தை பதிவுக்கு ஏற்கலாம் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x