

அம்பேத்கர் நினைவு நாளில் பிற சமூகப் பெண்களைக் கட்டி அணைப்போம் காதலிப்போம் என கோஷமிட்ட காணொளியை தனது ட்விட்டரில் பதிவிட்டு திருமாவளவன் தான் இதற்குக் காரணம் என எச்.ராஜா கண்டித்துள்ளார்.
நாடகக் காதல் என பாமக நிறுவனர் ராமதாஸ் அடிக்கடி கண்டிப்பார். இதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை மயக்கி காதலித்து பின்னர் கைவிடுவது, மிரட்டிப் பணம் பறிப்பது வழக்கமாக உள்ளதாக அப்போது அவர் இயக்கமாக நடத்தினார்.
இந்நிலையில் டிச-6 அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஏராளமான காணொலிகள் வந்தன. இதில் ஒரு காணொலி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனேகர் இதைக் கண்டித்துள்ளனர். இதில் கோஷமிடும் இளைஞர் தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம், திருமணம் செய்வோம் என கோஷமிடுகிறார்.
இதை வலைதளங்களில் கண்டித்துள்ள பலரும் சட்டமேதை அம்பேத்கர் இதையா செய்யச்சொன்னார், ஏன் தான் அவரை இப்படி தவறாக புரிந்துகொள்கிறீர்கள், அவரை இப்படி கேவலப்படுத்தலாமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த இளைஞர்மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இளைஞர் கோஷமிடும் காணொளியைப் பதிவிட்டு இதற்கு திருமாவளவன்தான் காரணம் என திருமாவளவனை வம்பிழுத்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு திருமாவளவன் போன்றோரின் சரக்கு மிடுக்கு பேச்சே காரணம். இம்மாதிரி போக்கு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளேன். இம்மாதிரி செயல்கள் அண்ணன் அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்.“
இவ்வாறு எச்.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.