Published : 22 Dec 2018 06:40 PM
Last Updated : 22 Dec 2018 06:40 PM

குடிமக்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்க உத்தரவிடுவதா?- திருமாவளவன் கண்டனம்

குடிமக்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்க உத்தரவிடுவதா என, மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய குடிமக்கள் எவருடைய தனிப்பட்ட கணிணியையும் ஆராயவும், அவர்களது தனிப்பட்ட மின்னஞ்சல்கள், பதிவுகள் எல்லாவற்றையும் வேவு பார்க்கவும் மத்திய உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பத்து விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கை ஆகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2009-ன் விதிகளில் நாட்டின் பாதுகாப்புக்காக முன் அனுமதி பெற்று குடிமக்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களை ஆராய வழியுள்ளது. எனினும் 'அந்தரங்கமும் அடிப்படை உரிமையே' என கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், ஆதார் தொடர்பான வழக்கில் அதை மறு உறுதி செய்த பின்னர் அந்த விதிகளை மத்திய அரசு விருப்பம்போலப் பயன்படுத்தமுடியாது என்ற தடை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக என்றால்கூட இப்போது நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே அதைச் செய்யமுடியும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கும் இந்த ஆணை பிரதமர் மோடி இந்த நாட்டை சர்வாதிகார முறையில் ஆள விரும்புவதையே அடையாளம் காட்டுகிறது.

பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. ஏற்கெனவே ஒரு போலிக் கடிதத்தின் அடிப்படையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை பாஜக அரசு சிறையில் அடைத்துள்ளது. அதைப்போல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகளைப் புனைந்து அரசியல் ஆதாயம் தேடவே இந்த உத்தரவு வழிவகுக்கும். 

அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிப்பதாகவும் அமைந்துள்ள மோடி அரசின் இந்த உத்தரவை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்" என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x