

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9-ல் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த மே 28-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, நேரடியாக ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா தரப்பில் இன்று (புதன்கிழமை) முறையீடு செய்யப்பட்டது. பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஹென்றி திபேன் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் இன்று முறையீடு செய்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மனுவாகத் தாக்கல் செய்யப்பட்ட பின் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்