

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க் கிழமை தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவ, மாணவிகள் உட்பட 32 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியின் பேருந்து சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 46 மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலை யோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்தில் பயணம் செய்த பள்ளி சிறுவர்களான ஆஷித்(6), ஆசிப்(6), சரண்யா(5), தமிழ் செல்வன்(7), திரேஸ்கிஷோர்(6), அபிமன்யூ(6), பார்த்தீபன்(7), ஜீவா(9), ஞானமுருகன்(9), தஸ்விந்த்(8), திலீபன்(6), கவிதா (12) உள்பட 30 மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர். மேலும் பஸ்ஸில் கிளினராக பணியாற்றிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தியாக துருகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர் பாக தியாகதுருகம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.