Published : 05 Dec 2018 07:50 AM
Last Updated : 05 Dec 2018 07:50 AM

மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி விவாதிக்க சட்டப்பேரவை நாளை கூடுகிறது; மத்திய அரசு அனுமதியை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்ற முடிவு

மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம் நாளை மாலை கூட்டப் பட்டுள்ளது. கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று தெரிகிறது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டு வில் காவிரி ஆற்றின் குறுக்கே 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டப் படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தரா மையா அறிவித்தார். அதன் தொடர்ச் சியாக மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த முயற்சிக ளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. இந்த வரைவு திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசிடமும் தமிழக அரசு வலியுறுத்தி வந்தது.

எனினும், கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த திட்டத்தை உடனே தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

‘தமிழ்நாடு உட்பட காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ளும் மாநிலங் களின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. மேகேதாட்டு அணையானது குடிநீர் திட்டத்துக்கானது மட்டு மல்ல; கர்நாடகாவில் காவிரி நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிக் கும் நோக்குடனேயே தயாரிக் கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தமிழக அரசின் நேர்மையான, நியாயமான கருத்துகளை ஆலோசிக்காமல், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவுத் திட்டத் துக்கு மத்திய நீர்வள ஆணை யம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையால், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெறும் வகையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண் டும்’ என முதல்வர் பழனிசாமி அந்தக் கடிதத்தில் வலியுறுத் தியிருந்தார்.

மேலும், மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், மேகேதாட்டு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேகேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பேரவையைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நேற்று முன்தினம் பேரவைத் தலைவர் ப.தனபால், முதல்வர் பழனிசாமி ஆகியோரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பேரவையைக் கூட்டுமாறு மனு கொடுத்தனர்.

இந்நிலையில் மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி விவாதிப் பதற்காக தமிழக சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் அவசர மாகக் கூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளார். வியாழக்கிழமை (நாளை) மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மேகேதாட்டு அணைக்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் படும் என்று தெரிகிறது.

இதே விவகாரம் பற்றி விவாதிப் பதற்காக கர்நாடக அரசு சார்பிலும் பெங்களூருவில் நாளை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக எம்.பி.க்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

நாடாளுமன்றம் வரும் 11-ம் தேதி கூடுகிறது. இக்கூட்டத் தொடரில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியான அதிமுக சார்பிலும் மாநிலத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சி னைகள் குறித்து ஆலோசிக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூட்டம் நடக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. இதில் அதிமுக எம்பிக்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், மேகேதாட்டு விவகாரம், கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x