

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டு மாவட்டங்களைத் தாக்கி கோரத்தாண்டவம் ஆடிய ‘கஜா' புயல், அவற்றில் ஒன்பது மாவட்டங்களை மிகவும் கடுமையாகத் தாக்கி அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. இந்த மாவட்டங்களில் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நேரடியான தாக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சென்னை ராயப்பேட்டையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். புயல் பாதித்த மாவட்டங்களில் 16 ஆயிரத்து 856 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களை விட தற்பொழுது டெங்கு காய்ச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளது. பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.