Published : 01 Dec 2018 03:14 PM
Last Updated : 01 Dec 2018 03:14 PM

திருவாரூர் மாவட்டத்தில் தென்னை மரங்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேளாண் அலுவலர்களுடன் இணைந்து  திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்தும்  வேளாண்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நேற்று இந்தக் கணக்கெடுப்பு தொடங்கியது. திருத்துறைப்பூண்டி ,முத்துப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணி கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .

இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''திருவாரூர் மாவட்டத்தில் 412 கிராமங்களில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றில் 290 கிராமங்களில் கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்துள்ளது. 234 பேர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக,  ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 193 மரங்கள் முத்துப்பேட்டை பகுதியில் விழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 88 ஆயிரத்து 424 மரங்கள் சாய்ந்துள்ளதாக இதுவரை நடந்து முடிந்த கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

கணக்கெடுக்க வரும் அலுவலர்கள் விவசாயிகளின் முகவரி அவர்களது செல்போன் தொடர்பு எண் , ஆதார் எண் மற்றும் எத்தனை தென்னை மரங்கள் விழுந்துள்ளன என நேரடியாகப் பார்த்து வருகிறார்கள். வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள,  குறுத்து ஒடிந்த தென்னை மரங்கள், குறுத்துத் திருகிய நிலையில் உள்ளவை, பாதி உடைந்த நிலையில் உள்ள தென்னை மரங்கள் என நான்கு விதமாக புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x