Published : 06 Aug 2014 09:58 AM
Last Updated : 06 Aug 2014 09:58 AM

அனைத்து கோயில்களிலும் படிப்படியாக அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் செந்தூர் பாண்டியன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்துத் கோயில்களிலும் அன்னதானத் திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ் வாய்க்கிழமை இந்து சமய அற நிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

ஸ்ரீரங்கம், பழநி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவதுபோல் மற்ற கோயில் களிலும் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டனர். மற்ற கோயில்களுக்கும் அன்னதான திட்டத்தை படிப்படியாக விரிவு படுத்த முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர், சமயபுரம் மாரியம்மன், சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன், திருவேற்காடு கருமாரி யம்மன் ஆகிய கோயில்களில் பக்தர்கள் நலன் கருதி ரூ.1 கோடியில் நவீன இயந்திரம் மூலம் தரமான குங்குமம் தயாரித்து வழங்கப்படும்.

வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், ஆனைமலை மாசாணி யம்மன் கோயில் உள்ளிட்ட 9 கோயில்களில் ரூ.3.59 கோடியில் பக்தர்கள் வசதிக்காக புதிய மண்டபங்கள் கட்டப்படும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான காலியிடங்களில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் ரூ.1.41 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்படும். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் கழிவறை மற்றும் குளியலறைகள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

இந்து அறநிலையத்துறை பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சம்பள விகித அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகிய கோயில்களில் ரூ.1 கோடியில் நவீன இயந்திரம் மூலம் தரமான குங்குமம் தயாரித்து வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x