இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; தமிழக அரசு மெத்தனம்: திருமாவளவன் கண்டனம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; தமிழக அரசு மெத்தனம்: திருமாவளவன் கண்டனம்
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு மெத்தனம் காட்டுவது வேதனைக்குரியது. தமிழக அரசின் இப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக்  கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆறாவது ஊதியக் குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கிடையில் உருவான ஊதிய வேறுபாடுகளை விலக்கி, சமமான வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த 23-12-2018 அன்று முதல் சென்னை டிபிஐ வளாகத்தில், பாதிப்புக்குள்ளாகி வரும் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள், இரவு-பகலென தண்ணீரும் அருந்தாமல் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அதனை ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையென்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்த 01-06-2009 அன்று முதல் இந்த ஊதிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தநாளுக்கு முன்னர் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் அதன்பின்னர் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்குமிடையே ஏறத்தாழ 20,000 ரூபாய்களுக்கு மேல் வேறுபாடு நிலவுவது அதிர்ச்சியளிக்கிறது. ஒரே பணி; ஆனால், வெவ்வேறு ஊதியம் என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. ஒரே வேலை- ஒரே சம்பளம் என்பதுதானே நியாயமாக இருக்க முடியும். இது எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் ஒரு உண்மையாகும்.

ஆனால், அரசு தரப்பினர், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள  ஒரு நபர்க் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் எனக் கூறிக்கொண்டு காலம் தாழ்த்துவது வியப்பாகவுள்ளது. இந்த வேறுபாட்டைக் களையவேண்டும் என்பதில் ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே கூடிக் கலந்தாய்வு செய்து முடிவெடுக்கலாம். இதில் அரசுத் தரப்பினருக்கு என்ன தயக்கம் என்பது விளங்கவில்லை.

கடந்த ஒருவாரமாக வெயிலிலும் குளிரிலும் பலநூறு பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான  ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் திறந்தவெளியில், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையிலும் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், அரசு மெத்தனம் காட்டுவது வேதனைக்குரியது. தமிழக அரசின் இப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக்  கண்டிக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு நீதி கிடைத்திட ஆவனசெய்ய வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in