

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணி, கொள்கையற்ற, சுயநல கூட்டணி என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச் சாவடி' என்ற தலைப்பில் பாஜக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். தமிழகத் தில் இதுவரை 2 கட்டங்களாக 10 தொகுதிகளில் கலந்துரையாடல் நிகழ்வு முடிந்துள்ளது.
3-வது கட்டமாக வட சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் மோடி நேற்று கலந்துரையாடினார்.
முதலில் மத்திய சென்னை தொகுதி பொறுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘‘இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையின் வளர்ச் சிக்கு மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது’’ என்றார்.
அதைத் தொடர்ந்து வட சென்னை தொகுதியைச் சேர்ந்த சுதர்சன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘‘பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு கொள்கையும் இல்லை. எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற சுயநலத்துடன் இணைந்துள்ளனர். ஏழை, எளிய மக்களுக்காக சிறந்த திட்டங்களை தந்த மக்கள் தலைவரான எம்ஜிஆர் ஆட்சியை 1980-ல் காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் காங்கிரஸை வீழ்த்தவே தொடங்கப்பட்டன. ஆனால், இன்று அக்கட்சிகள் சுயநலத்துக்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸை வீழ்த்த இயக்கம் தொடங்கிய ராம்மனோகர் லோகியாவை பின்பற்றுவதாக கூறும் கட்சிகள் ,பதவிக்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளன'' என கடுமையாக விமர்சித்தார்.
வட சென்னை தொகுதி பொறுப்பாளர்களுடன் உரையாடலைத் தொடங்கிய மோடி, அப்பகுதியைச் சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் என புகழ் பெற்ற மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரன் பணிகளை பாராட்டினார்.
மதுரை தொகுதி பொறுப்பாளர்களுடன் உரையாடிய மோடி, ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்காக பெருமை பெற்ற மதுரை, இனி எய்ம்ஸ் மருத்துவமனைக்காகவும் பேசப்படும்'' என்றார்.
தொடர்ந்து திருச்சி, திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளர்களுடன் உரையாடிய மோடி, ‘‘தமிழகம் நகரமயமாக்கலில் முதலிடம் வகிக்கிறது. நகரமயமாக்கலை சவாலாக பார்க்காமல் வாய்ப்பாக பார்க்க வேண்டும். உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் 10 நகரங்கள் இந்தியாவை சேர்ந்ததாகவே இருக்கும் என தெரியவந்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெறும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
‘‘பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடினமாக உழைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தங்களது வாக்குச் சாவடியை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். நமோ ஆப் மூலம் அதிகமான நபர்களிடம் குறைந்தது ரூ.5 நன்கொடை பெற வேண்டும்’’ எனவும் மோடி அறிவுறுத்தினார்.