Last Updated : 17 Dec, 2018 09:27 AM

 

Published : 17 Dec 2018 09:27 AM
Last Updated : 17 Dec 2018 09:27 AM

பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கி, ஆதார் எண்களை தெரிந்துகொண்டு பண மோசடி: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீஸார் அறிவுரை

பிரபல காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் கூறி வங்கி மற்றும் ஆதார் எண்ணை தெரிந்து கொண்டு நூதன முறையில் தற்போது மோசடி நடக்க ஆரம்பித்துள்ளது. எனவே, பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வங்கி வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண்களை சேக ரித்து வைத்துக் கொண்ட மோசடி கும்பல் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகக் கூறி, அனைத்து விபரங் களையும் தெரிந்து கொண்டு போலி கார்டு தயாரித்து பணத்தைச் திருடி வந்தது. இதுபற்றி பொதமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் தற்போது வேறுமாதிரியான மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதாவது பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் அக்கவுண்ட் நம்பர், ஆதார் நம்பரைக் கொடுத்தால் பாலிசி பணத்தை வங்கியில் கிரெடிட் செய்வதாகக் கூறுகின்றனர். இதை நம்பி வாடிக்கையாளர்களும் வங்கி எண், ஆதார் எண்ணை கொடுக் கின்றனர். பின்னர் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே வாடிக்கை யாளர்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களது கணக்கில் உள்ள பணம் முழுவதையும் சுருட்டி விடுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபற்றி சென்னையில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது ‘‘இந்த மோசடி நபர்கள் வடமாநிலங் களில் உள்ளனர். முதலில் வாடிக்கை யாளர்களின் ஆசையை தூண்டி விடுகின்றனர். பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில், எதிர் தரப்பில் கேட்கும் தகவல்களையும் வாடிக்கையாளர்கள் கூறி விடுகின்றனர். இப்படித்தான் பணம் பறிபோகிறது. எனவே, மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இது போல தினமும் 5 முதல் 10 புகார்கள் வரை காவல் ஆணையர் அலுவல கத்துக்கு வருகிறது’’ என்றனர்.

மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க போலீஸாரின் ஆலோசனை கள்:

* வங்கி தொடர்பான விபரங்களை யார் போனில் கேட்டாலும் அதை தெரிவிக்கக் கூடாது.

* உண்மையிலேயே வங்கியில் இருந்துதான் அழைப்பு வருகிறதா என்பதை வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

* நீங்கள் மேற்கொள்ளாமலே பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.

* உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவரின் கணக்குக்குப் பணம் மாற்ற தொலைபேசி வாயிலாக ஒப்புதல் அளிக்க வேண்டாம்.

* மோசடி ஆசாமிகள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x