Published : 17 Nov 2018 01:51 PM
Last Updated : 17 Nov 2018 01:51 PM

கஜா புயல்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டுத் தொகையைப் பெற செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்; வைகோ

பயிர்களுக்குக் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் உடனடியாக காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு அரசே தகுந்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், " 'கஜா' புயல் தாக்குதலால் நாகப்பட்டினம் மாவட்டம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டும், மின்கம்பங்கள் முறிந்து போனதால் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியும் கிடக்கின்றன. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துகளை முடிந்த மட்டும் தடுத்து இருக்கின்றனர்.

மின் துறை ஊழியர்களும், மருத்துவத் துறைப் பணியாளர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்பார்வையில் ஊண் உறக்கம் கருதாது நிலைமையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் பாராட்டத்தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருந்தாலும், 'கஜா' புயலால் 51 பேர் உயிர்ப்பலி ஆனது வேதனை அளிக்கின்றது.

புயல் கரையைக் கடந்த வேதாரண்யம் பகுதி மிகக் கடுமையாகச் சேதம் அடைந்து இருக்கின்றது. வேதாரண்யம்-பட்டுக்கோட்டை, வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம்-நாகப்பட்டினம் சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் போக்குவரத்து உடனடியாகச் சீரடையுமா என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மீனவ கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதம் அடைந்து விட்டன. மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகள் உடைந்து நொறுங்கின.

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளும் மற்றும் கல் வீடுகளும் சிதைந்து போயின. நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

சேதுபாவா சத்திரத்தில் 4 ஆயிரத்து 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் வளர்க்கப்பட்டு இருந்த ஒரு லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. பேராவூரணிப் பகுதியிலும் 10 ஆயிரம் தென்னை மரங்கள் புயலில் முறிந்து விழுந்துள்ளன. மா, பலா, வாழை உள்ளிட்ட மரங்களும் ஆயிரக்கணக்கில் விழுந்துள்ளன.

காவிரி டெல்டா மட்டும்  அன்றி புயல் காற்றால் திருச்சி மாவட்டம் லால்குடி, தொட்டியம், முசிறி, திருவரங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழை மரங்கள் குலைதள்ளி காய்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தபோது முறிந்து விழுந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த முருங்கைப் பயிர்களும் முற்றிலும் அழிந்து விட்டன.

சேதமுற்ற நெற்பயிர்கள், தென்னை, வாழை, முருங்கை மற்றும் மா, பலா மரங்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று பொதுமக்கள் ஊடகங்களில் தெரிவிக்கும் தகவல்களிலும் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளைச் சீர்செய்ய போர்க்கால வேகத்துடன் செயல்பட வேண்டும்.

'கஜா' புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு பாதிப்புகளைக் கணக்கெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிசைகளை இழந்தோர் மற்றும் வீடுகள் சேதமடைந்தோர் பற்றிய விவரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும்.

நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் உடனடியாக காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு அரசே தகுந்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும். பலத்த மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கைகளில் கூறப்பட்டு இருப்பதால், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x