Published : 26 Nov 2018 12:48 PM
Last Updated : 26 Nov 2018 12:48 PM

ஐராவதம் மகாதேவனின் மறைவு இலக்கிய துறைக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஐராவதம் மகாதேவனின் மறைவு பத்திரிகை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'தினமணி' இதழின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் (88), சென்னையில் இன்று (திங்கட்கிழமை) அவரது இல்லத்தில் அதிகாலையில் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், 'தினமணி' முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாக பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய,அறிவியல் உலகத்திற்கு அரிய கருத்துக்களையும் விதைத்தவர். 

மறைந்த தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிக ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் அவரின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர். 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதினைப் பெற்ற ஐராவதம் மகாதேவனின் மறைவு பத்திரிகை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x