

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் திருவள்ளூரில் நடந்தது.
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து காத்தல், கடத்தலை தடுத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்- 2012-ஐ அமல்படுத்துவது, பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாப்பது போன்றவை குறித்து செஸ் நிறுவன திட்ட மேலாளர் வளவன் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தார்.
முன்னதாக முகாமை தொடங்கிவைத்து ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: பெண் குழந்தைகள் நன்கு படித்து, அதிக மதிப்பெண்களை பெறுகின்றனர். ஆனால், அதிக அளவில் பாலியல் பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். ஆனால் அதுபற்றி அவர்கள் வெளியில் சொல்வதில்லை. பாலியல் பாதிப்புகளால் பெண் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை களைய வேண்டியது அனைத்து அரசு துறைகளின் பொறுப்பாகும்.
இதற்காக அதற்குரிய சட்டங்களைப் பற்றி, அதிகாரிகள் நன்கு புரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான், பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அதிலிருந்து அவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிக்க இயலும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சையத் ரவூப், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.