‘கஜா’ புயல் எதிரொலி: பாம்பனில் கடல் உள்வாங்கியது; ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் கனமழை

‘கஜா’ புயல் எதிரொலி: பாம்பனில் கடல் உள்வாங்கியது; ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் கனமழை
Updated on
2 min read

‘கஜா’ புயல் கரையை கடக்கத் தொடங்கியதும் பாம்பனில் கடல் உள்வாங்கி  ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்தது.

'கஜா' புயல் வியாழக்கிழமை நள்ளிரவு கரையை நெருங்கத் தொடங்கியதும் ராமேஸ்வரம் அதன் சுற்றுப் பகுதிகளில்  இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழையின் வேகம் அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மழையின் அளவு சற்று குறைந்து சாரல் மழையாகப் பெய்தது.

புயல் காரணமாக பாம்பன் கடல் பகுதி 100 மீட்டர் தூரம் வரையிலும் உள்வாங்கியது. புயல் அறிவிப்பினால் ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  குறைந்ததுடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ராமேசஸ்வரம் ரயில் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தனுஷ்கோடியிலிருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டதால் ராமேசஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி, அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் வெளியூர்களுக்கு குறைவான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இரண்டாவது நாளாக மதுரை, திருச்சி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய சேது மற்றும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமநாதபுரத்திலேயே நிறுத்தப்பட்டு பேருந்துகள் மூலம் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டனர். 

நேற்று மாலை நிலவரப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட புயல்  பாதுகாப்பு மையங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

முன்னதாக கஜா புயல் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 10 அன்று ஒன்றாம் எண் புயல் கூண்டும், நவம்பர் 11 அன்று இரண்டாம் எண் புயல் கூண்டும், நவம்பர் 15 அதிகாலை மூன்றாம் எண் புயல் கூண்டும், வியாழக்கிழமை பிற்பகல் எட்டாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் கஜா புயலின் மத்திய பகுதி நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்ததும் வெள்ளிக்கிழமை மதியம்  எட்டாம் எண் புயல் கூண்டு இறக்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்: வாலிநோக்கம் 67, மண்டபம் 58 மி.மீ, ராமேஸ்வரம் 50 மி,மீ, தங்கச்சிமடம் 47 மி,மீ, பாம்பன் 45 மி.மீ, திருவாடனை 28 மி.மீ, பரமக்குடி 26 மி.மீ, ஆர்.எஸ். மங்கலம் 25 மி.மீ அளவும் மழை பெய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in