

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் வழக்கறிஞர் சங்கரசுப்பு முறையீடு செய்தார்.
இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்து இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனையேற்ற நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிவடையும் பட்சத்தில் மதியம் வழக்கை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கறிஞர் எஸ்.ரஜினிகாந்த் பெயரில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் மனுவில், ''கஜா புயலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புது வீடுகள் கட்டித்தர வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.