

புதுவையில் வழக்கறிஞர் அவர் மனைவியை கொன்று நகைப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 24 மணி நேரத்தில் கொலையாளிகள் சிக்கினர். அவரது கார் ஓட்டுநரே கொலை செய்தது அம்பலமானது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியான நெல்லித்தோப்பில் உள்ள அண்ணா நகர் 14-வது தெருவில் வசித்தவர் பாலகிருஷ்ணன் (72). பிரான்சில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஹேமலதா (68). இவர்களுக்கு இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர். இதனால் வக்கீல் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்த்தளத்தில் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் இருவரும் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டிருந்த நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதிகாலையில் வழக்கறிஞரின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர், வக்கீல் அவரது மனைவி இருவரும் கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள உருளையன் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு முதல்வர் நாராயணசாமி நேரில் வந்து ஆய்வு நடத்தினார். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பாலகிருஷ்ணனிடம் தற்காலிக கார் ஓட்டுநராக பணியாற்றிய காசிம் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரைப்பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றியபோது அவர் வசதியானவர் என்பதையும், வீட்டில் தம்பதிகள் தனியாக இருப்பதையும் அறிந்து பணம் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கு தனக்கு துணைக்கு ஜலால் என்பவரை சேர்த்துகொண்டு பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். தெரிந்த நபர்கள் என்பதால் வீட்டுக்குள் அவர்களை அனுமதித்துள்ளார். ஆனால் உள்ளே சென்றவுடன் அவர்களை தாக்கி பணம், நகைகள் பற்றி கேட்டுள்ளனர்.
பணம் நகையை கொள்ளையடித்துச் சென்றாலும் பாலகிருஷ்ணன் தமபதிக்கு தன்னை தெரியும் என்பதால் போலீஸில் காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் அவர்கள் இருவரையும் தாக்கி, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தோம் பின்னர் நகைப்பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றோம் என்று தெரிவித்தனர்.
முடிவில் காசிம் கூறியது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எவ்வளவு கொடூரமானவர்கள் இருவரும் என போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்ததால் மிகுந்த போராட்டம் நடத்தியதாலும், பதற்றம் காரணமாகவும் களைப்பாக உணர்ந்ததால் வீட்டின் சமையலறைக்கு முதலில் சென்று டீபோட்டு குடித்துவிட்டு பின்னர் நகைப்பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றதாக கொலையாளிகள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.