

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.
மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்றதாக அருப்புக் கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி, புரட்சிகர மாணவர் இளை ஞர் முன்னணியின் மாநில ஒருங் கிணைப்பாளர் கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அறிக்கை வெளியிட தடை
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்த ஆளு நரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசா ரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் இதுவரை நடத்தப் பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். குற்றப் பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை சரியான திசையில் நடந்துவருவதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மனுதாரர் தரப்பில், ‘‘நிர்மலா தேவி விவகாரத்தில் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் திருந்தாலும், இதை பாலியல் துன் புறுத்தல் வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண் டும். அப்போதுதான் இதில் மறைந் துள்ள பல உண்மைகள் வெளியே வரும்’’ என்று வாதிடப்பட்டது.
உள்நோக்கம்
இதையடுத்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:
யாருக்கோ குறிவைத்து, அதை நீதிமன்றம் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந் துள்ளார். இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தமி ழக அரசு தனியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கும், பல் கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தனியாகவும், பல்கலைக்கழகம் தனியாகவும் விசாரணை நடத்தியுள்ளது.
ஆளுநர் தனியாக ஒரு தனிநபர் குழு அமைத்து விசாரணை நடத்த உரிமை உள்ளது. இந்த சூழலில், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை. எனவே, இதுதொடர்பான கோரிக்கையை ஏற்க இயலாது.
அதேநேரம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்கும் ‘விசாகா’ குழு, மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் செயல் படுகிறதா? இதுகுறித்த விதி முறைகள் சரியாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் டிசம்பர் 12-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.