

விழுப்புரம் அருகே பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46). இவருக்கும் விக்கி ரவாண்டியை சேர்ந்த சபீனா பானு (34) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஜாகிர் உசேன் வேலைக்காக வெளிநாடு சென்றார்.
இந்நிலையில் சபீனா பானுவுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்த டிரைவர் யுவராஜூடன் (29) கூடா நட்பு ஏற்பட்டது. இது கிராம மக்களுக்கு தெரிந்துள்ளது.
கடந்தாண்டு வெளிநாட்டி லிருந்து வந்த ஜாகீரிடம் சபீனா- யுவராஜ் இருவரின் கூடா நட்பைப் பற்றி கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், சபீனா மீதான நம்பிக்கையில் இதனை ஜாகீர் உசேன் பொருட்படுத்தவில்லை. ஆனால் நீண்ட நேரம் சபீனா மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை ஜாகீர் உசேன் கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் சபீனாவும் யுவராஜும் சந்தித்ததாக கிராம மக்கள் சொன்னதை ஜாகீர் உசேன் சபீனாவிடம் கேட்டிருக்கிறார். இதில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் ஒரு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜாகீர் மீது ஊற்றிய சபீனா அவருக்கு தீ வைத்தார். தீ பற்றிய நிலையில் கத்திக்கொண்டே வீட்டுக்கு வெளியே வந்தார்.
இதை அறிந்த அக்கம்பக் கத்தினர் தீயை அணைத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றும் வரும் ஜாகீர் உசேன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சபீனா மற்றும் யுவராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.