Published : 20 Aug 2014 11:20 AM
Last Updated : 20 Aug 2014 11:20 AM

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.

ராணுவத்தினருக்கு விதிவிலக்கு

இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.

கிராஜுவிட்டி ரத்து

அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.

அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.

தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் இந்த 2 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பயன்கள் கிடைக்கும் என்பதால்தான் எல்லோரும் அரசு வேலையை விரும்புகின்றனர். நாங்களும் அப்படி நினைத்துதான் பணியில் சேர்ந்தோம். ஆனால், தற்போது அந்தப் பயன்கள் எதுவும் கிடைக்காது என்பதை நினைத்தால் ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது. தமிழக அரசு முன்பு நடைமுறையில் இருந்த வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x