

புயல் நிவாரண பணிகள் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளதால், பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. நாகை எஸ்.பி.யுடன் சென்ற அதிவிரைவுப்படை போலீஸாரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 10 போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு ஒன்றியங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. புயலால் வீடுகளை இழந்த 26 ஆயிரத்து 956 பேர், 61 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு தங்களுக்கு போதிய அளவு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை எனவும், முகாம்
களை பார்வையிட உயரதிகாரிகள் வராமல் கிராம உதவியாளர்கள் மட்டுமே வந்து செல்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் புயல் பாதித்த பகுதிகளை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை, கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர் திரும்பிச் சென்றுவிட்டார். இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மாவட்டச் செயலாளர் நாகை மாலி உள்ளிட்டோரும் புயல் பாதிப்பை பார்வையிட வேதாரண்யம் பகுதிக்கு சென்றனர். அவர்களை வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கள்ளிமேட்டில் தடுத்து நிறுத்திய பொதுமக்கள், ‘‘அமைச்சர்களே எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நீங்கள் பார்வையிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று கூறி தடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தங்களுக்கு போதிய அளவு உணவு வழங்கவில்லை என்று கூறி பிரதாபராமபுரம், தாண்டவன்மூர்த்திகாடு, ஆறுகாட்டுத்துறை, பன்னாள், காமேஸ்வரம் ஆகிய இடங்களில் மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகையில் இருந்து வரும் எந்த அரசு வாகனத்தையும் மக்கள் செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி அருகே நேற்று அதிவிரைவுப் படை போலீஸாருடன் கார்களில் சென்று கொண்டிருந்த நாகை எஸ்.பி விஜயகுமாரை பொதுமக்கள் வழிமறித்து, அவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால், எஸ்.பி. விஜயகுமார் ஒரு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுவிட்டார். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 10 போலீஸார் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தலைஞாயிறு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பை சேர்ந்த ரகுமான் கூறியது: முகாம்களில் மக்களுக்கு அடிப்படை வசதி ஏதும் இல்லை. குழந்தைகளுக்கு பால்கூட போதிய அளவு வழங்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மரங்களையும், மின்கம்பங்களையும் அகற்றுவது ஒருபுறம் இருந்தாலும், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அதிகாரிகள் உரிய வசதிகளை செய்து தர வேண்டும். அப்போதுதான் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்றார்.
பிரதாபராமபுரத்தை சேர்ந்த கணேசன் கூறியது: முகாம்களில் கழிப்பறை வசதி இல்லை.
இதனால், பெண்கள் அவதியுறுகின்றனர். அனைத்து முகாம்களிலும் பெண்களுக்கு தனி கழிவறை, உடை மாற்றும் அறை வேண்டும் என்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க, திருத்துறைப்பூண்டி விளக்குடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிவாரண மையத்தை திறக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஏற்கெனவே, மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த தனியார் திருமண மண்டபத்தில், வெளிமாவட்டங்களில் இருந்து மீட்புப் பணிக்காக வந்த மின்வாரிய ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டு விட்டதால், மக்களை தங்க வைக்க மாற்று இடம் இல்லை.
இதையடுத்து, இப்பகுதி மக்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார், வருவாய்த் துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இதேபோல, திருவாரூரில் மின் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறை சாலை யில் அப்பகுதி மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
எம்எல்ஏ வீடு முற்றுகை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில், புயல் சீரமைப்புப் பணிகள் முடங்கி உள்ளன. நிவாரணம் மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ் வீட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் போலீஸார் எம்எல்ஏ வீட்டுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
பாதியில் திரும்பிய மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தஞ்சாவூரில் இருந்து கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள பனங்குடி, வாராப்பூர் உள்ளிட்ட பகுதிகளைப் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர் சோத்துப்பாளை கிராமத்துக்கு சென்றார். அங்கு பொதுமக்களுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளுக்கு செல்லாமல் மு.க.ஸ்டாலின் பாதியிலேயே திரும்பிச் சென்றார்.