கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் நிவாரணப் பொருட்களைத்  திரட்டி வழங்கிய பாம்பன் மீனவ இளைஞர்கள்

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் நிவாரணப் பொருட்களைத்  திரட்டி வழங்கிய பாம்பன் மீனவ இளைஞர்கள்
Updated on
2 min read

ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் தாக்கும் போதும் ‘வாட்ஸ் அப்’ மூலம்   நிவாரணப் பொருட்களை திரட்டி பாம்பனைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் வழங்கி வருகின்றனர்.

‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில்  மதுரை, திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்தப் புயலால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 4 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும், பறவைகளும் உயிரிழந்துள்ளன. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதடைந்துள்ளன.

புயல் தாக்கிச் சென்ற 7-வது நாளான நேற்றும் குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால், ஆங்காங்கே மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  ராமேசுவரம் அருகே பாம்பனைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் தங்களது ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பொருட்களும், பொது நிவாரண நிதியும் திரட்டி அளித்து வருகின்றனர். மீனவ இளைஞர்களின் இத்தகைய முயற்சியை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து பாம்பனைச் சேர்ந்த காட்டர் கூறியதாவது

''பாம்பனைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் 66 பேர் கொண்ட எங்கள் குழுவினர், ‘பாம்பன் தீவு செய்திகள்’ என்ற குழுவை வாட்ஸ் அப் மூலம் நடத்தி வருகின்றோம்.

எங்கள் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் கடலுக்குச் செல்லும் இளைஞர்கள் தான்.  யாரும் செல்வந்தர்கள் எல்லாம் கிடையாது. வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பித்ததும் பாம்பனில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து செல்போன் மூலம் படம்பிடித்து குழுவில் பதிவிட்டு வருவோம். பின்னர் மாதம் இரு முறை குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி பாம்பனில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை  நாங்களே பெருக்க திட்டமிட்டோம். இதன் அடிப்படையில் மருத்துவ உதவி, ரத்த தானம், கல்வி உதவி என்று முதலில் செய்ய ஆரம்பித்தோம்.

பின்னர் தமிழகத்தை வர்தா புயல் தாக்கிய போது சென்னை, கடலூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தினால் ஸ்தம்பித்த போது முதன்முறையாக எங்கள் குழு மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை பொது மக்களிடமிருந்து திரட்டி அளித்தோம். சமீபத்தில் கேரளா வெள்ளத்தில் பாதித்த போது 5 லட்சம் மதிப்பிலானே நிவாரணப் பொருட்களைக் கொண்டு போய் சேர்த்தோம்.

தற்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் , ரஸ்க், பிரெட் பாக்கெட்டுகள், காய்கறிகள், அரிசி, பருப்பு , சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்கள், பால் பவுடர், மருந்து பொருட்கள், சாப்பாட்டு தட்டுகள், டம்ளர்கள், சமையல் பாத்திரங்கள் , போர்வைகள், தார்பாய்கள், பாய்கள், கைலிகள், நைட்டிகள், பெண்கள்  குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகள், நாப்கின்கள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட ரூ. 4 1/2 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சேர்த்து வியாழக்கிழமை இரவு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனி வாகனம் மூலம் கொண்டு செல்ல உள்ளோம்''.

இவ்வாறு காட்டர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in