Published : 16 Aug 2014 11:00 AM
Last Updated : 16 Aug 2014 11:00 AM

நீதிமன்ற உத்தரவை ஏற்று வீடுகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்படுமா?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

நீதிமன்ற உத்தரவை ஏற்று வீடுகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வீடுகளுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்கப்படுவது கண்ணியமாக வாழ்வதற்கான மக்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், இத்தகைய மதுக்கடையை மூட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

மதுக்கடை அமைப்பதற்கான விதிகளைத் தாண்டி மக்களின் வாழும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பு புரட்சிகரமானதாகும்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வதைவிட மது விற்பனையை பெருக்குவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வீட்டிற்கு பக்கத்தில் மதுக்கடை திறக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை நீதியரசர் நாகமுத்து வழங்கியிருக்கிறார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்குள் மதுக்கடைகளை அமைக்கக்கூடாது என்று தான் விதிகள் கூறுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க எந்தவிதமான தடையும் இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.

அதுமட்டுமின்றி, ‘‘ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மக்கள் வாழ்வதற்கான உரிமையை வழங்கியிருக்கிறது. இதில், கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கை, அமைதியான சூழல், சுத்தமான காற்றை சுவாசித்தல் ஆகியவற்றுக்கான உரிமையும் அடங்கும் என்று உச்சநீதிமன்றம் பல காலகட்டங்களில் கூறியிருக்கிறது. போதை தலைக்கேறிவிட்டால் இங்குள்ள மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நான் அறிவேன். இத்தகைய சூழலில் வீட்டிற்கு அருகில் மதுக்கடை இருந்தால் அது மக்களின் வாழ்க்கை தொடர்பான அனைத்து உரிமைகளையும் பறித்து விடும். எனவே, வீட்டிற்கு அருகிலுள்ள மதுக்கடையை மூடவேண்டும்’’ என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

மதுவால் மனிதர்கள் மிருகமாகிறார்கள்; மது மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இதற்கு காரணமான மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இதை தமிழக அரசு புரிந்து கொள்ளாத நிலையில், உயர்நீதிமன்றம் புரிந்து கொண்டு மக்களின் கண்ணியமான வாழ்க்கை உறுதி செய்யப்படவேண்டுமானால் வீடுகளுக்கு அருகிலுள்ள மதுக்கடை மூடப்படவேண்டும் என்று தீர்ப்பு அளித்திருப்பது இனிவரும் காலங்களில் மதுவுக்கு எதிரான போராட்டங்களுக்கு வழிகாட்டும் ஒன்றாக அமையும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியது மட்டுமின்றி போற்றத்தக்கதும் ஆகும்.

மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரே ஒரு மதுக்கடை சம்பந்தப்பட்டது தான் என்றாலும், மற்ற மதுக்கடைகளை மூடுவதற்கான போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்னையில் 90% மதுக்கடைகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 60% மதுக்கடைகளும் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு அருகில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் எந்நேரமும் அச்சத்துடன் வாழவேண்டியிருக்கிறது; பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தின் மொழிகளில் சொல்வதாக இருந்தால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கண்ணியமான, அமைதியான வாழ்க்கையை வாழும் உரிமையை இழந்து தவிக்கின்றனர். எனவே, மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வீடுகளுக்கு அருகிலுள்ள மற்ற மதுக்கடைகளுக்கும் பொருந்தும்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மட்டுமின்றி, ஆலோசனை மற்றும் அறிவுரைகளையும் அரசு மதிக்க வேண்டும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், அத்தீர்ப்பை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அத்தீர்ப்பையும், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையும் மதித்து, வீடுகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளையும், கிராமசபைகளால் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மதுக்கடைகளையும் மூடி மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு அரசு உத்தரவாதமளிக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x