Published : 01 Nov 2018 12:52 PM
Last Updated : 01 Nov 2018 12:52 PM

வடகிழக்கு பருவமழை தொடங்கியது; கடந்த கால மோசமான அனுபவங்கள் ஏற்படாது: அமைச்சர் உதயகுமார் பேட்டி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் ஏற்படாது என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளதையடுத்து, சென்னை எழிலகத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

“வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தொற்றுநோய் தடுப்பு, மீட்பு, நிவாரண பணிகள் என மூன்று கட்ட பணிகளை வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் 32 மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்று அறிவிப்பு கிடைத்திருக்கிறது. அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் 35-45 கிமீ வரை காற்று வீசக்கூடும்.

கடந்த அக்டோபர் 1 முதல் 31 வரை பெய்த சராசரி மழை அளவு 180.8 மிமீ. இதுவரை 156 மிமீ மழை பெய்துள்ளது. இது மைனஸ் 13% ஆக உள்ளது. தூத்துக்குடி, கோவை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்தாண்டை விட கூடுதல் மழையும், நீலகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், அரியலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான மழையும், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது.

நேற்றைய நிலவரத்தின்படி 21 மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. அதன் சராசரி மழை அளவு 7.4 மிமீ. சென்னை மாவட்டத்தில் அதிகளவாக 38.31 மிமீ மழையும், குறைந்த அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 0.15 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்தாண்டை விட சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, வீராணம், புழல் ஏரிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சென்னைக்கு 1070 என்ற இலவச உதவி எண்ணும், மற்ற மாவட்டங்களுக்கு 1077 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூவம், அடையாறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட கால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் நேரடியாக கண்காணித்து வருகின்றார். முடிச்சூர் போன்ற பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் ஏற்படாது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் உயர் அலுவலர்களின் நேரடி கண்காணிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் இடங்களாக 800-க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. தற்போது, அவை 205 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x