Published : 14 Nov 2018 02:16 PM
Last Updated : 14 Nov 2018 02:16 PM

ஜெயலலிதா சிலை திறப்பில் அவமதிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஜெயலலிதா சிலை திறப்பில் அவர் சிலையை முறையாகத் திறக்கவில்லை என்பதும், மாலை போட்டு முகத்தில் துண்டு போர்த்தி வைத்திருந்ததும் தொண்டர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக இரண்டு, மூன்று பிரிவாக பிளவுபட்டு தற்போது ஒன்றாகவும், டிடிவி தனி அணியாகவும் உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சி என்று அமைச்சர்கள் நொடிக்கு நூறுதரம் கூறிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் சிலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. ஆனால் சிலையைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏனோ தானோவென்று சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தச் சிலையை மாற்றுவதாக அமைச்சர்கள் அறிவித்தனர். சிலையும் கடந்த 8 மாதங்களாக சிறப்பாகத் தயாரானது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை பீடத்தில் வைக்கப்பட்டது.

சிலை திறப்பு சிறப்பாக இருக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று மாலை அனைத்து ஊடகங்களுக்கும் ஜெயலலிதாவின் சிலை இன்று காலை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாகத் திறந்து வைக்கின்றனர் என்ற தகவல் அனுப்பப்பட்டது.

இதற்கான தகுந்த முன்னேற்பாடோ, போஸ்டரோ, பேனரோ, கூட்டத்துக்கான எந்த அழைப்பிதழும் இல்லாத நிலையில் தொண்டர்களுக்கும் அழைப்பிதல் இல்லை என்கிற நிலையில் இன்று விழா நடத்தப்பட்டது.

சிலை திறப்பு விழாவுக்கு வந்த தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பொதுவாக சிலை திறப்பு என்றால் நான்கு புறமும் ஸ்க்ரீன் போட்டு சிலை மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் ஜெயலலிதா சிலையின்மீது ஒரு துண்டைப் போர்த்தி வைத்திருந்தனர். இதைப் பார்த்த தொண்டர்கள் சிலர் முணுமுணுத்தனர், வருத்தப்பட்டனர்.

அப்போது அமைச்சர்கள் யாரும் வரவில்லை. சிலர் அதைப் புகைப்படம் எடுத்தனர். ஜெயலலிதா சிலையின் மீது இப்படி சாதாரணமாக துண்டு போர்த்தி வைத்திருப்பது சரியா என சுட்டிக்காட்டியவுடன் உடனடியாக துண்டு அகற்றப்பட்டது. பின்னர் அங்கு வந்த  ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள்  சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் சிலையின் முகத்தின்மீது துண்டு போர்த்திய விவகாரம் வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஒரு கட்சியின் தலைவர் சிலை திறப்பில் இப்படியா நடப்பார்கள் என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது.

இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது.

இன்று ஜெயலலிதா சிலை திறப்பின்போது முறையான ஏற்பாடுகள், அழைப்பிதழ் போஸ்டர் எதுவும் இல்லாமல், சிலை திறப்பதிலும் சர்ச்சை எழுந்துள்ளதே?

என்ன சர்ச்சை எழுந்துள்ளது?

அவரது சிலையின் முகத்தின் மீது துண்டு போர்த்தியுள்ளதாக புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறதே?

அது தவறான செய்தி. அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்படி இருந்தது உண்மைதான், அமைச்சர்கள் வருவதற்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டு அகற்றப்பட்டது, அவரது சிலையை முறையாக திறக்கவில்லை என்கிற விமர்சனம் வெளியாகி உள்ளதே?

இது சிலை திறப்பு நிகழ்ச்சி அல்ல, ஏற்கெனவே 'அம்மாவின்' சிலை முதல்வர், துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. சிலை திறக்கப்பட்ட பின் சில கருத்துகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் வந்ததை அடுத்து சிலை திருத்தம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில், தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டு இன்று அமைக்கப்பட்டது.

இன்று 'அம்மா'வுக்கு புகழ்மாலை சூட்டும் வகையில் சிலை நிறுவப்பட்டது. ஏற்கெனவே சிலை திறக்கப்பட்டுவிட்டது. புகழஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகவே சிலை திறப்பு விழா என்றால்தான் அதுபோன்ற சம்பிரதாயங்கள் இருக்கும்.

அதனால் இன்று சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இல்லை. தத்ரூபமாக சிலை இருக்கவேண்டும் என்று தொண்டர்கள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாற்று சிலை வடிவமைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டது. அது புகழஞ்சலி கூட்டம் மட்டுமே, சிலை திறப்புவிழா கூட்டமல்ல.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x