Last Updated : 16 Nov, 2018 09:53 AM

 

Published : 16 Nov 2018 09:53 AM
Last Updated : 16 Nov 2018 09:53 AM

புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை:  பாதிப்புகளைப் பார்வையிட காரைக்காலுக்கு புறப்படும் முதல்வர்

புதுச்சேரியில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது. எனினும் புதுச்சேரிக்கு பெரிய பாதிப்பில்லை. காரைக்கால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அமைச்சர்களுடன் இன்று புறப்படுகிறேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் 'கஜா' புயலையொட்டி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான் ஆகியோர் புதுச்சேரியிலும், காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும் நேரடியாக களத்தில் இரு நாட்களாக பணியாற்றினர். கட்டுப்பாட்டு அறை தொடங்கி பல இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருந்தனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் ரோமண் ரோலண்ட் தெரு, கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட 7 இடங்களில் மரங்கள் விழுந்தன. பாகூரில் தாசில்தார் அலுவலகத்திலும் மரம் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள், போலீஸார் களத்தில் இறங்கி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கோரிமேட்டில் உயர் மின்விளக்கு சரிந்து சாலையில் விழுந்ததையும் அகற்றினர். 16 குழுக்களும் அரசுத் தரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல்  பல  உயர் அதிகாரிகள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தனர்.

புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் மரங்கள், மின்கம்பங்கள் சில இடங்களில் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் காரைக்காலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3000 பேர் வரை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள் தற்போது காரைக்காலில் 300 கையிருப்பில் உள்ளது. தேவையைப் பொறுத்து 2000 மின்கம்பங்கள் வரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நானும், அமைச்சர்களும் இன்று காரைக்கால் புறப்பட்டுச் செல்ல உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 செ.மீ. மழையளவு பதிவாகியிருந்தது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள வாட்ஸ்அப் உத்தரவில், "சேதங்கள் அனைத்தும் ஆதாரம் அடிப்படையில்தான் கணக்கில் கொள்ளப்படும். அதற்குரிய புகைப்படம், வீடியோக்களை உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனில் எடுங்கள். அதில் தேதி, நேரமும் பதிவாகியிருக்கவேண்டும். வருவாய்த்துறையினர் காலதாமதமின்றி எடுத்து அனுப்புங்கள். நிவாரணத்துக்காக மத்திய அரசுக்கு அனுப்ப இந்த ஆதாரங்கள் கண்டிப்பாக தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x