

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பெண் அதிகாரி திருமகளின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபா லீஸ்வரர் கோயில் புன்னை வனநாதர் சந்நிதியில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு புதிய மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணு சீனிவாசன், தமிழக அரசின் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேணு சீனிவாசன் தாக்கல் செய்திருந்த மனுவில், 'மயிலாப்பூர் கோயில் கும்பாபிஷேக திருப் பணிக்குழு உறுப்பினர் என்ற முறையில்தான் கோயில் திருப் பணிகளில் ஈடுபட்டேன். இதற்காக எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.50 லட்சத்துக்கும்மேல் செலவு செய்துள்ளேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு, முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.மகாதேவனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒன்றாக விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:
இந்த வழக்கில் மயிலாப்பூர் கோயிலில் இருந்த பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக மயில் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான ஆவணங்களை கூடுதல் ஆணையர் திருமகள் அழித்ததாகவும் அறநிலையத் துறையில் பணிபுரியும் 3 இணை ஆணையர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள தாகக் கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
வீடியோ ஆதாரங்கள்
அதிலும் குறிப்பாக ஒரு இணை ஆணையர், பெண் அதிகாரி திருமகள் ஆவணங்களை அழிப் பதை கண்ணால் பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதேபோல மயில் சிலை மாற்றப்பட்டதற்கான ஆதாரமாக 2004-ல் கும்பா பிஷேகத்துக்கு முன்பாகவும், பின் பாகவும் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் ஆணையரான திருமகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வேணு சீனிவாசன் உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவர்கள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் தலா ரூ.1 லட்சத்துக்கான பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வேணு சீனிவாசன் உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது. ஒருவேளை அதிகாரி திருமகள் விசாரணையின்போது இந்த 3 பேரில் யாரையாவது கைநீட்டினால் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களது முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
குற்றச்சாட்டு நிரூபணமானால்..
அதை ஏற்க மறுத்த நீதிபதி கள், "ஒருவேளை இந்த 3 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் இந்த நீதிமன்றத்தை நாடலாம். அதேபோல அவர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.