

உலகப் புகழ்பெற்ற சூழலியல் பகுதியான வேதாரண்யம் கோடியக் கரை காடுகள் ‘கஜா’ புயலின் ஆக்ரோஷத்தால் அழிக்கப்பட் டுள்ளன.
‘பாயின்ட் காலிமர்’ என அழைக்கப்படும் கோடியக்கரை காடுகள் உலக அளவில் புகழ்பெற்ற வனப் பகுதிகளில் ஒன்றாகும். ‘பறவைகளின் சொர்க்க பூமி’ என கோடியக்கரை காடுகளைப் பிரபல பறவையியல் அறிஞர் சலீம் அலி புகழ்ந்திருக்கிறார்.
நாகை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் வங்கக் கடலோரம் சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப் பளவில் இந்தக் காடுகள் பரந்து விரிந்திருக்கின்றன. வனவிலங்கு கள் சரணாலயமும், பறவைகள் சரணாலயமும் கொண்ட வனப் பகுதி இது. வெளிமான்கள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றி, மட்டக்குதிரை என பல விலங்குகள் இங்கு உள்ளன. குரங்குகள் அதிக அளவில் இருக்கின்றன.
பறவைகளைப் பொறுத்தமட் டில், பூநாரை, சிறவி வகைகள், கடல் காகம், ஆலாக்கள், கூழைக் கிடா, கரண்டி மூக்கு உள்ளான், செங்கால் நாரை என உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் இந்த வனப் பகுதிக்கு வந்து செல்கின்றன.
பாதுகாக்கப்பட்ட அரிய வகை மூலிகைகள் பல இந்த வனப் பகுதியில் பரவியிருக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சூழலியல் ஆய்வாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இத்தகைய பல சிறப்புகள் வாய்ந்த இந்த வனப் பகுதி கஜா புயலின் கபளீகரத்தால் ஒரே நாள் இரவில் சிதைக்கப்பட்டு விட்டது. பெருமளவில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. சுழன்று, சுழன்று எல்லா திசைகளிலிருந்தும் வீசிய காற்றால் மரங்களில் இருந்து பெரும்பாலான இலைகள் உதிர்ந்து விட்டன. கிளைகள் ஒன்றோடு ஒன்று மோதி, மரத்தின் பட்டைகள் உரிக்கப்பட்டு விட்டன. அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்க்கும்போது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசுமையைக் காண முடியவில்லை. வனம் எங்கும் பட்டுப்போன மரங்களாகத் தெரிகிறது.
புயல் காற்றின் கோரதாண்ட வத்தில் சிக்கி வனத்துக்குள் இருந்த ஏராளமான விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடற்கரையோரம் இறந்து கிடந்த மான்கள் கண் டெடுக்கப்பட்டன.
கடந்த தீபாவளிக்குப் பிந்தைய நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வனப் பகுதியில் இருந்ததாகவும், இப்போது மிகவும் குறைவான பறவைகளையே பார்க்க முடிகிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பம்பாய் இயற்கை வரலாற்று ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநரும், பறவையியல் ஆய் வாளருமான டாக்டர் எஸ்.பாலச் சந்திரன் கூறும்போது, “தீபாவளிக்கு மறுநாள் சுமார் 9,000 பூநாரை களைப் பார்த்தோம். புயல் அடித்த 10 நாட்களுக்குப் பிறகு வனப் பகுதிக்குள் சென்றபோது இறந்த 150 பூநாரைகளைக் கண்டோம்.
10 நாட்களுக்குப் பிறகு இவ்வ ளவு எண்ணிக்கையில்தான் காண முடிகிறது என்றால் பெருமளவில் பூநாரைகள் இறந்திருக்கக் கூடும் என்று அச்சமாக உள்ளது. அதேபோல் தீபாவளிக்கு மறுநாள் 30,000-க்கும் மேற்பட்ட உள்ளான்களைக் கண்டோம். இப்போது 1,000 உள்ளான்களைக் கூட காண முடியவில்லை.
எங்கும் நிறைந்திருக்கும் ஆலாக்கள், கடல் காகங்களை அரிதாகவே காண முடிகிறது. வனப் பகுதியில் நடந்து செல்லும்போது காட்டுக்குருவிகளின் சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். இப் போது பெரும் அமைதி நிலவு கிறது. இத்தகைய சூழல்களைப் பார்க்கும்போது, பெரும் கவலை யாக உள்ளது” என்றார்.
புயலுக்குப் பிறகு ஊரின் பல பகுதிகளில் இறந்துகிடந்த பறவை களைக் கண்டதாகவும், சிறகுகள், கால்கள் உடைந்து உயிருக்கு போரா டிய நிலையில் ஏராளமான பறவை களைப் பார்த்ததாகவும் கோடியக் கரை மக்கள் கூறுகின்றனர்.
பசுமை மாறாக் காடுகள் எனப் போற்றப்பட்ட கோடியக்கரை காடுகள் இப்போது தமது பசுமையை இழந்து விட்டன. அரிய வகை உயிரினங்கள் ஏராளமாய் மடிந்து விட்டன. தமது முந்தைய நிலைக்கு இந்த வனப்பகுதி திரும்ப மிக நீண்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.