Last Updated : 18 Nov, 2018 03:30 PM

 

Published : 18 Nov 2018 03:30 PM
Last Updated : 18 Nov 2018 03:30 PM

முதல்வர் ஒப்புதல் இல்லாமலே  நிதித்துறை சுற்றறிக்கை:  சர்ச்சை வரிகளை நீக்கி அதிகாரிகளுக்கு நாராயணசாமி ஆணை

துறை அமைச்சரான முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் நிதித்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் அதில் இருந்த சர்ச்சையான வரிகளை நீக்கி உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி ஆணையிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ. 762 கோடியை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியுள்ளது. அதேநேரத்தில் தீபாவளியையொட்டி சில மாத ஊதியத்தை பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தோருக்கு தர அரசு முடிவு எடுத்து கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், கோப்புக்கு ஒப்புதல் கிடைக்கப்படவில்லை.

இந்நிலையில் நிதித்துறை தரப்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கோப்பினை ஏற்கவில்லை என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தால் வழங்க வேண்டும் என்று அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு ஆணை ஒன்றை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிறப்பித்துள்ளார். அதில், ''புதுச்சேரி அரசின் நிதித்துறை செயலர் நிதியமைச்சர் மற்றும் முதல்வரின் ஒப்புதல் இல்லாமல், செலவின மேலாண்மை குறித்து ஒரு சுற்றறிக்கையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில் நிதி தொடர்பான தற்காலிக செலவு, இதர செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒப்புதல்  பகிர்ந்தளிப்பு அதிகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியானது அல்ல.

தற்போதைய நிதிச்செயலரின் சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தி, 2014-ம் ஆண்டு வழங்கிய நிதி பகிர்ந்தளிப்பு ஆணைக்கு எதிரானதாகும்.  திட்டங்களுக்கும், வேலைகளுக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகள், செயலர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மறைத்து தற்காலிக மற்றும் இதர செலவுகளுக்கு மட்டுமே 2014-ம் ஆணை சொல்கிறது என்று கூறிய அந்த சுற்றறிக்கை சரியானதல்ல.  கெட்ட நோக்கமுடையதாகும் மற்றும் சட்ட விரோதமானதாகும்.  மேலும்,  இந்த சுற்றறிக்கை மாநில நிதி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டதாகும். 

புதுச்சேரியின் அமைச்சரவை, மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி சட்டப்பேரவை ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட் செலவினத்தை, புதுச்சேரியில் உள்ள எந்த ஒரு அதிகாரம் படைத்த தனிநபருக்கும் மாற்றம் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

நிதித்துறையின் சுற்றறிக்கையால் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும்.  மேலும், இது நிதித்துறை கவனித்து வருகின்ற முதல்வரின் ஒப்புதலையும் பெறவில்லை. 

எனவே, நிதித்துறையைக் கவனிக்கும் முதல்வராகிய நான் சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தி சட்ட விரோதமானது என்றும், அது செல்லத்தக்கதல்ல என்று ஆணையிடுகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக செலவின ஒப்புதல் வழங்கப்பட்ட நிலை தொடரவேண்டும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது'' என்று நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவு தலைமைச்செயலர், நிதித்செயலர், அனைத்து செயலர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x