Published : 09 Nov 2018 08:57 AM
Last Updated : 09 Nov 2018 08:57 AM

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 6,312 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல் 

மத்திய தொகுப்பில் இருந்து முழுமையான மின்சாரத்தை வழங்க வேண்டும் என மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து தமிழக அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சரிடம் மனு ஒன்றை தங்கமணி அளித்தார். அதைத் தொடர்ந்து, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கையும் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சருடன் தமிழக மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர், எரிசக்தித் துறை செயலர் முகமது நசிமுதீன் ஆகியோர் இருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வரும் 2020-21-ம் ஆண்டில் வடசென்னை திட்டம்-3, உப்பூர், உடன்குடி, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம், எண்ணூர் விரிவாக்கம், எண்ணூர் மாற்று ஆகிய அனல் மின் திட்டங்களில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்குத் தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை 15 நாட்களுக்கு மேல் அதிகரிக்க வேண்டும். இதற்காக நாள் ஒன்றுக்கு 20 ரயில்களில் நிலக்கரி அனுப்பவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 6,312 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால், தற்போது 3,376 மெகாவாட் மட்டும்தான் வந்து கொண்டிருக்கிறது. எனவே, மத்திய மின் தொகுப்பில் இருந்து முழுமையான மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் மே முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் கிடைக்கும். எனவே, அந்த காலகட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆண்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x