

கிழக்குக்கடற்கரை சாலை வழியாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு இயக்கப்படும் பஸ்களில் வரும் பயணிகளை, திருவான்மியூர் பகுதியிலேயே இறக்கிவிடுவதால் அவர்கள் பெரிதும் அவதிப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு பணியின் காரணமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இதனால், புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏராளமான பஸ்களை தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன. இதில், ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால், தமிழக அரசு விரைவு பஸ்கள் சில நேரங்களில் சென்னை புறநகர் பகுதியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிடுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 14-ம் தேதி புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான தமிழக அரசு பஸ் ஒன்று திருவான்மியூர் அருகே திடீரென நிறுத்தப்பட்டு பயணி கள் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் வேறொரு பஸ்ஸில் மாற்றிவிடப்பட்டனர். இதனால், முதியோர், குழந்தைகள் அவதிப் பட்டனர்.
இது தொடர்பாக அந்த பஸ்ஸில் பயணம் செய்த கவிஞர் பாரதிதாசன் கொள்ளு பேத்தி மல்லிகை, கொள்ளு பேரன் பரமநாதன் ஆகியோர் கூறுகையில், ‘‘கடந்த 14-ம் தேதியன்று புதுச்சேரியில் இருந்து வந்துக் கொண்டிருந்த போது, திருவான்மியூரில் திடீரென இறக்கிவிட்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தோம். இதனால், வயதானவர்கள், குழந்தைகளுடன் இருந்த தாய்மார் கள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக நடத்துநரிடம் கேட்ட போது, எங்களின் உயர் அதிகாரிகள் பயணிகளை இறக்கிவிட்டு, வேறு பஸ்ஸுக்கு மாற்றிவிடுங்கள். பின்னர், பஸ்சில் மீண்டும் புதுச்சேரிக்கு சென்றுவாருங்கள் என உத்தரவிட்டுள்ளதாக கூறினர். இப்படி பயணிகளை புறநகர் பகுதியிலேயே இறக்கிவிடுவது என்ன நியாயம்? எனவே, இனியாவது பயணிகளை பாதியிலேயே இறக்கிவிடாமல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணிகள் இறக்கிவிட வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். அப்படி உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.