Published : 27 Nov 2018 03:37 PM
Last Updated : 27 Nov 2018 03:37 PM

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது

தமிழகத்தில் நவம்பர் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இந்த நாட்களில் இரவு மற்றும் அதிகாலை நரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் மழைக்கு வாய்ப்பில்லையோ என கவலை வேண்டாம்.

சுமத்ரா தீவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 29-ம் தேதி மாலத்தீவு நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு மழை வாய்ப்புள்ளது.

எனினும் காற்று வலிமையாக இல்லாததால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட மேற்குபகுதி மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழை குறைவாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரளவே மழையை எதிர்பார்க்கலாம்.

அதேசமயம் கடலோரா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனினும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிக மிக கடுமையான மழையாகவோ இருக்க வாய்ப்பில்லை. டிசம்பர் -5ம் தேதிக்கு பிறகே வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x