

குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, கலால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட பலரது வீடுகளில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது அதில் குற்றம் சாட்டப்பட் டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் ஆகியோரின் பெயர்கள் இல்லை.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ டிஎஸ்பி கண்ணன் நேற்று திடீரென மாற்றப்பட்டு, பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஆய்வாளரான கேரளாவைச் சேர்ந்த பிரமோத் என்பவரும் விசாரணையில் இருந்து விலகி இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சில ரகசிய தகவல்களின்பேரில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.