Published : 10 Aug 2014 02:00 PM
Last Updated : 10 Aug 2014 02:00 PM

‘நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல நிகழ்காலமும் குழந்தைகள்தான்’

எல்லோரும் குழந்தைகள் குறித்து பேசும்போது குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறுகிறார்கள், உண்மையில் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல நிகழ்காலமும்தான் என்றார் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷல் சிங்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியபோது,

‘‘குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு எதிராக சாக்குப் போக்குகளைச் சொல்பவர்கள் பட்டம் பெற்றவர்களாகவே இருந்தாலும் படிக்காத முட்டாள்களே. குழந்தைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கடத்தல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

நிகழ்வில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேசியபோது, “குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறைக்காக தற்போது ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற திருச்சியிலுள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுடனான உரையாடலில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வியில் அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், லால்குடி மயில்ரங்கம் பகுதியிலிருந்து பள்ளி மாணவர்களை அரசுப் பேருந்துகள் நிறுத்தி ஏற்றிவருவதில்லை என்ற மாணவரின் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அப்பகுதியின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து வசதி ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினார்கள்.

தனியார் பள்ளிகளில் உடற் கல்வி பாடவேளையின்போது மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்று ஒரு மாணவி தெரிவித்ததை அடுத்து, இதுகுறித்து புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவியுங்கள், உடனடியாக உதவி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பிஷப் ஹீபர் கல்லூரியின் சைல்ட் லைன் நோடல் அமைப்பின் இயக்குநர் காட்வின் பிரேம் சிங் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பால்தயாபரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜெயந்திராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். நிகழ்வில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உஷா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.தேவிகா, டாக்டர் மரிய கமலம், கேத்தன் ஜெ.வோரா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x