Published : 14 Nov 2018 02:24 PM
Last Updated : 14 Nov 2018 02:24 PM

மோடியின் நினைவெல்லாம் அதானி – அம்பானி தான்: ஸ்டாலின் விமர்சனம்

பிரதமர் மோடியின் நினைவெல்லாம் அதானி – அம்பானி பற்றியே இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திருமண விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

"சீர்திருத்தத் திருமணவிழா நடைபெறுகிறபோது ஒரு வரலாற்றுச் செய்தியை நினைவுபடுத்துவது என் கடமை. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் ஒரு காலத்திலே நடைபெற்றால் அதை எள்ளிநகையாடுவார்கள். அத்திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது. திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா தான் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இங்கு என்னைக் காண வந்த சமயத்தில், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா என செய்தியாளர்களிடம் கேட்டார். இதைவிட கேவலம் – வெட்கம் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. காரணம் ஒரு 'கிரிமினல் கேபினெட்' தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி 84 நாடுகளுக்குச் சென்ற செலவு தொகை ஆயிரத்து 500 கோடி ரூபாய், அது அவர் சொந்தப் பணமா? மக்களுடைய வரிப்பணம். இன்றைக்கு உலகம் சுற்றும் பிரதமராக மோடி  விளங்கிக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி நினைவெல்லாம் அதானி – அம்பானி. தமிழக அரசு நினைவெல்லாம் கமிஷன் – கலெக்சன் – கரெப்சன்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதற்கிடையில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வரும் என்று எதிர் நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக வந்தால் கூட ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை" என ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x