

கிருஷ்ணகிரியில் கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடி மாயமான நிலையில் கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்டனர். தந்தை உட்பட 3 பேர் கைதான நிலையில் ஆணவக்கொலையா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ் (22) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். ஐடிஐ முடித்துவிட்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்று வந்தவர் ஸ்வாதி (19) இவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
கல்லூரிக்கு சென்று வரும் நேரத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணம் முடிந்தப்பின்னர் தான் வேலை செய்யும் நிறுவனம் அருகிலேயே இருவரும் ஓசூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்தவாரம் இருவரும் தலை தீபாவளியை கொண்டாடினர். நந்தீஷின் வீட்டில் அவரது சகோதரர் சங்கர் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார். தனது சகோதரனைப் பார்க்க கடந்த 11-ம் தேதி சங்கர் ஓசூர் சென்றுள்ளார். ஆனால் அங்கு நந்திஷ், சுமதி இருவரையும் காணவில்லை.
அவர்கள் எங்கே போனார்கள் என்று அவர்களது செல்போனுக்கு தொடர்புக் கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் இருவரையும் பல இடங்களில் சங்கர் தேடியுள்ளார். ஆனால் புதுமண தம்பதி இருவரையும் காணவில்லை.
இதையடுத்து தனது சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவரையும் காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இரண்டு உடல்கள் கிடப்பதாக அங்குள்ள போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய நிலையிலும், பெண்ணின் உடல்கயிற்றால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையிலும் கிடந்தது.
இருவர் உடலும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஊதிப்போய் இருந்தது. இந்நிலையில் புதுமண தம்பதிகள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்துவதை அறிந்து சுவாதியின் தந்தை சீனிவாசன் என்பவரும் சில உறவினர்களும் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் கிடந்த உடல்கள் நந்திஷ், சுவாதியின் உடல்கள் என்பது தெரியவந்தது. இரண்டு உடல்களை கிருஷ்ணகிரி போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாற்று சமுதயத்தை சார்ந்த இளைஞரை மணந்த காரணத்தால் ஆத்திரமுற்றவர்கள் தம்பதிகளை கடத்திச்சென்று ஆணவக்கொலை செய்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். தொடர்ந்து சரணடைந்த சீனீவாசன் உள்ளிட்ட பெண்ணின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உடலை மீட்ட கர்நாடக போலீஸார் தம்பதிகள் கொலை சமபந்தமாக சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடத்தலுக்கு உதவிய வாகன ஓட்டுனர் சுவாமிநாத், அஷ்வத், வெங்கட்ராஜ் அகிய மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உடுமலை சங்கர் ஆணவக்கொலை தமிழகத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது அதில் குற்றவாளிகள் பெற்றோராக இருந்தாலும் உறுதியாக நின்று தண்டனை வாங்கிக்கொடுத்தார் கவுசல்யா, ஆனால் இந்த கொலையில் மணமக்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.