

வேலையில்லா பட்டதாரி திரைப் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக புகையிலைப் பொருள்களைக் கட்டுப்படுத்து வதற்கான தமிழ்நாடு மக்கள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.சிறில் அலெக்சாண்டர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து தற்போது தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பதைப் போன்ற காட்சிகள் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. எனினும் எச்சரிக்கை வாசகங்கள் எதுவும் திரையில் இடம்பெறவில்லை. ஆகவே, புகையிலைக் கட்டுப் பாட்டு விதிமுறைகளை மீறியதற் காக படத் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், அந்தப் படத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று சிறில் அலெக்சாண்டர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சத்தியசந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, “புகையிலைப் பொருள்கள் கட்டுப்பாட்டு விதி முறை மீறல்களை கண்காணிப் பதற்கான குழு அமைக்கப்பட் டுள்ளது. மனுதாரர் கூறும்படி விதிமுறை மீறல் ஏதேனும் நடந்துள்ளதா அல்லது இல்லையா என்பது பற்றி அந்தக் குழுதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.