

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாருடன் நடத்திய பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்ததால் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், நிதித்துறை செயலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒருங் கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), அ.மாயவன் ( தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), க.மீனாட்சி சுந்தரம் (தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), கு.வெங்கடேசன் (தலைமைச் செயலகம்) உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது:
ஜெயக்குமார், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ்
ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைச்சர் எந்த வாக்குறுதியும் தரவில்லை. முதல்வருடன் சென்று விவரிக்கிறேன் என்று சொல்கிறாரே தவிர பேசி முடிவைச் சொல்கிறேன் என்று சொல்லவில்லை.
2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தும் எங்களுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த அரசு புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. அமைச்சர், நிதித்துறை செயலாளர் எங்கள் கோரிக்கைமீது உறுதியான முடிவை அறிவிக்கவில்லை.
கோரிக்கைகள் எல்லாவற்றையும் கேட்ட அமைச்சர் முதல்வரிடம் நீங்கள் சொல்லியவற்றை சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார். எங்களுடைய நியாயமான கோரிக்கையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
ஆகவே நாளை நடக்கின்ற ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்கூட்டத்தில் வருகின்ற அனைத்து துறைவாரி சங்கங்கள், ஆசிரிய அமைப்புகளின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் உணர்வு என்ன என்பதை புரிந்து அதற்குள் முதல்வர் அவர்கள் எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப்பேசி நிறைவேற்றுவார் என்பதை இன்னும்கூட நம்புகிறோம்.
இல்லாவிட்டால் ஏற்கெனவே என்ன முடிவெடுத்தோமோ அதை நோக்கி செல்வோம் என்று கூறிக்கொள்கிறோம். நாளை கூடும் உயர்மட்டக்குழுவின் முடிவை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிப்போம். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.