

புவிப்பரப்பு ஆய்வுக்கான இந்தியாவின் ‘ஹைசிஸ்’ செயற்கைக் கோள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 31 செயற்கைக் கோள்களும் பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புவிப்பரப்பை விரிவாக ஆய்வு செய்வதற்காக ‘ஹைசிஸ்’ என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியது. இந்த செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் 23 மினி செயற்கைக் கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளின் மினி செயற்கைக் கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட்-டவுன் 28-ம் தேதி அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி, நேற்று காலை 9.57 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. தீப்பிழம்பை கக்கியவாறு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து ராக்கெட்டின் இயக்கத்தை கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடத்தில் அதன் முதல் 4 நிலைகள் படிப்படியாக எரிந்து வெற்றிகரமாக பிரிந்தன. அடுத்த 16 நிமிடத்தில், ராக்கெட்டின் பிஎஸ்-4 இன்ஜின் கட்ஆஃப் செய்யப்பட்டு, 17 நிமிடத்தில் புவியில் இருந்து 641 கி.மீ. தொலைவில் ஹைசிஸ் செயற்கைக் கோள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது.
இதைத் தொடர்ந்து, பிஎஸ்-4 இன்ஜின் 2 முறை ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 செயற்கைக் கோள்களும் 115 நிமிடங்களுக்குள் 534 கி.மீ. தொலைவில் நிர்ண யிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதை யில் ஒவ்வொன்றாக நிலைநிறுத்தப் பட்டன.
புவி ஆய்வுக்காக அனுப்பப்பட் டுள்ள இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக் கோள் 380 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். விவசாயம், வனவளம், புவிப்பரப்பு, கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் ஆகியவற்றின் தன்மை குறித்து தெரிந்துகொள்ளும் விதமாக புவிப்பரப்பை பல்வேறு கோணங் களில் படம் பிடித்து அனுப்பும். இதற்காக அதிநவீன கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம், புவி சூழ்நிலைகள், ராணுவ உளவுப் பணி ஆகியவற்றையும் இந்த செயற்கைக் கோள் கண்காணிக் கும்.
வாழ்த்து
பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் இந்திய செயற்கைக் கோள் உட்பட 31 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.